சோதனை சாவடியில் அமைச்சர் மனோ தங்கராஜ் திடீர் ஆய்வு
களியக்காவிளையில்சோதனை சாவடியில் அமைச்சர் மனோ தங்கராஜ் திடீர் ஆய்வு
களியக்காவிளை,
நெல்லை மாவட்டத்தில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனரக வாகனங்களில் அதிக பாரத்தில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் சாலைகள் விரைவாக சேதமடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க கோரியும், குமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் குமரி - கேரள எல்லையான களியக்காவிளை கோழிவிளை சோதனை சாவடியில் நேற்று முன்தினம் நள்ளிரவு அமைச்சர் மனோ தங்கராஜ் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது போலீசார் லாரிகளை சோதனை செய்யாமல் அனுப்புவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் கோபம் அடைந்த அமைச்சர் அங்கு பணியில் இருந்த போலீசாரை கடுமையாக எச்சரித்தார். மேலும் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்தை செல்போனில் தொடர்பு கொண்டு புகார் கூறி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அத்துடன் சோதனை சாவடியிலே இருந்து அந்த வழியாக வந்த கனிமவள லாரிகளை மடக்கி பிடிக்க உத்தரவிட்டு அதனை நேரடியாக பார்வையிட்டார்.