கோவில் நிலம் மீட்பு வேட்டை தொடரும்- ஈரோட்டில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி

கோவில் நிலம் மீட்பு வேட்டை தொடரும் என்று ஈரோட்டில் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Update: 2022-09-07 21:58 GMT

ஈரோடு

கோவில் நிலம் மீட்பு வேட்டை தொடரும் என்று ஈரோட்டில் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

அமைச்சர் ஆய்வு

ஈரோடு கோட்டை பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் (ஈஸ்வரன்) கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று (வியாழக்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதையொட்டி கும்பாபிஷேக பணிகள் குறித்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் அவர் யாக சாலை அமைக்கப்பட்டு உள்ள இடத்தை பார்வையிட்டார். அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த ஈஸ்வரன் சிலைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அங்கு வழிபட்ட அமைச்சர் சேகர் பாபு பின்னர் கோவிலில் உள்ள வாரணாம்பிகை, விநாயகர், வள்ளி கல்யாண சுப்பிரமணியர் தெய்வானை உள்ளிட்ட பரிவார தெய்வங்களையும் வழிபட்டார்.

300 கோவில்களில் கும்பாபிஷேகம்

இதைத்தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

இந்த கோவிலின் கும்பாபிஷேக பணிகள் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. இந்தநிலையில், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல் -அமைச்சரின் உத்தரவுக்கிணங்க கடந்த ஆண்டு ஜூலை மாதம், இந்து சமய அற நிலையத்துறை அதிகாரிகளுடன் இங்கு ஆலோசனை நடத்தி கும்பாபிஷேக பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆண்டு தமிழ் வருடப்பிறப்புக்கு முன்பு சுமார் 300 கோவில்களின் திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது. ஒரே ஆண்டில் 300 கோவில்களின் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருப்பது இந்து சமய அற நிலையத்துறை வரலாற்றில் இதுதான் முதல் முறை.

தமிழில் அர்ச்சனை

தமிழகம் முழுவதும் உள்ள இந்து சமய அற நிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருவட்டாறு கோவிலில் கூட திருப்பணிகளை விரைவில் முடித்து கும்பாபிஷேகம் நடத்திய ஆட்சி, தி.மு.க. ஆட்சி ஆகும். முன்னாள் முதல் -அமைச்சர் கருணாநிதி பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பின்னர் கொண்டு வந்த அன்னை தமிழில் வழிபாடு எனும் திட்டத்தை முழுமையாக அமல்படுத்திட முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, அன்னை தமிழில் அர்ச்சனை எனும் பதாகையை திறந்து வைத்து, 14 போற்றிப் புத்தகங்களையும் முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ளார். மேலும், அர்ச்சனை தொகையில் 60 சதவீதத்தை அர்ச்சகர்களுக்கே வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார். இவையெல்லாம் தமிழில் அர்ச்சனை செய்வதற்கு உந்து சக்தியாக அமைந்திருந்தது.

சிந்துபாத் கதைபோல்...

பெரும்பாலான கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படுகிறது. மேலும், தமிழில் அர்ச்சனை செய்யப்படாத கோவில்கள் குறித்து கவனத்துக்கு கொண்டு வரப்பட்டால் அங்கும் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோவில் நிலங்கள் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 'தினத்தந்தி'யில் வரும் சிந்துபாத் கதைபோல் இந்த நிலம் மீட்பு வேட்டை என்பது தொடரும்.

இதுவரை சுமார் ரூ.2 ஆயிரம் கோடிக்கும் மேல் மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு நிதி நிலை அறிக்கையின்போது வரவு -செலவு திட்ட அறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் போது மேலும் நிலம் மீட்புகள் குறித்து வெளியிடுவோம்.

இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

அப்போது அவருடன் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்