ராமியனஅள்ளியில்பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்

Update: 2023-08-24 19:00 GMT

தர்மபுரி மாவட்டம் ராமியனஅள்ளியில் நடந்த விழாவில் பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

தர்மபுரி மாவட்டம் ராமியனஅள்ளியில் பால்வளத்துறை சார்பில் பால் உற்பத்தியாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆவின் பொது மேலாளர் மாலதி வரவேற்று பேசினார். விழாவில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு 103 பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.35.46 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:- விவசாயிகள் பாலில் உள்ள கொழுப்பு, புரத சத்து எவ்வளவு உள்ளது என்பதை கொள்முதல் செய்யும்போது கண்டறிந்து பாலின் தரத்திற்கான விலையை கூடுதலாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கடந்த ஆண்டுகளில் மேற்கொண்ட பால் கொள்முதலுக்கான நிலுவைத்தொகையினை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தீவனங்கள்

கால்நடை பல்கலைக்கழக துறைத்தலைவர்கள், ஆவின் நிறுவன நிபுணர்களுடன் கலந்தாலோசித்து நல்ல தரம் உயர்த்தப்பட்ட தீவனங்கள் தருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். தர்மபுரி மாவட்டத்தில் ஒரு வருவாய் கிராமத்திற்கு ஒரு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கமாவது அமைக்க வேண்டும் என்பதை இலக்காக நிர்ணயித்துள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக ராமியனஅள்ளி தொகுப்பு பால் குளிர்விப்பு மையத்தினை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன், ஆவின் துணை பொது மேலாளர் கோவிந்தராஜ், உதவி துணை பொது மேலாளர் டாக்டர் குமரன், ஊராட்சி மன்ற தலைவர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆய்வுக்கூட்டம்

இதனை தொடர்ந்து தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசுகையில், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் நிலையான வருவாய் ஈட்டக்கூடிய சங்கங்களாக, உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

பின்னர் தர்மபுரி நகராட்சி உழவர் சந்தை அருகில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய நிர்வாக அலுவலகம் மற்றும் கொள்முதல் உள்ளீட்டு அலுவலக கட்டிடம் கட்டுமான பணிகள் மற்றும் செம்மாண்டகுப்பம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தினை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்