அரசு போக்குவரத்துக் கழக தற்காலிக பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
அரசு போக்குவரத்துக் கழகத்தில் குறைந்தபட்ச ஊதிய சட்டம் அமல்படுத்தப்படாமல் இருப்பதை ஏற்க முடியாது என நீதிபதி தெரிவித்தார்.
மதுரை,
மதுரை கோட்ட அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிகமாக பணிபுரியும் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மற்றும் டெக்னீசியன்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டதை விட குறைவாக ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் நிலுவையில் உள்ள ஊதியத் தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அரசு போக்குவரத்துக் கழகத்தில் குறைந்தபட்ச ஊதிய சட்டம் அமல்படுத்தப்படாமல் இருப்பதை ஏற்க முடியாது எனக்கூறி, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் நிலுவையில் உள்ள ஊதியத்தை 8 வாரங்களில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.