விருத்தாசலம் அருகே ரெயில்வே கேட்டில் மினிலாரி மோதல் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம் பயணிகள் கடும் அவதி

விருத்தாசலம் அருகே ரெயில்வே கேட்டில் மினிலாரி மோதியதால் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

Update: 2023-08-30 18:45 GMT

விருத்தாசலம், 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ரெயில் நிலையம் அருகே நாச்சியார்பேட்டை- எருமனூர் சாலையை கடக்கும் வகையில் ரெயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை 4.10 மணி அளவில் இந்த ரெயில்வே கேட் அருகே வந்த ஒரு மினிலாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரெயில்வே கேட்டில் மோதியது. இதில் ரெயில்வே கேட் சேதமடைந்து, சிக்னல் கோளாறு ஏற்பட்டது.

பாலத்தில் நின்ற ரெயில்கள்

இதற்கிடையே மாலை 4.40 மணிக்கு குருவாயூரில் இருந்து சென்னை நோக்கி வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ், சிக்னல் பிரச்சினையால் விருத்தாசலம் டவுன் ரெயில் நிலையம் அருகே மணிமுக்தாறு பாலத்தில் நடுவழியில் நின்றது. அதே நேரத்தில் சென்னையில் இருந்து மதுரை நோக்கி வந்த வைகை எக்ஸ்பிரஸ் விருத்தாசலம் ஜங்ஷன் ரெயில்வே நிலையம் முன்பு வயலூர் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் நின்றது.

1½ மணி நேரம் தாமதம்

இதுபற்றி அறிந்த விருத்தாசலம் ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து, ரெயில்வே கேட்டில் மோதிய மினி லாரியை அப்புறப்படுத்தி சிக்னல் கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் ரெயில்வே கேட் சீரமைக்கப்பட்டு, சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டதும், சுமார் 1½ மணி நேரம் தாமதமாக 2 ரெயில்களும் அங்கிருந்து புறப்பட்டு சென்றன.

இந்த விபத்து குறித்து விருத்தாசலம் ரெயில்வே இருப்புப்பாதை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் தலைமையிலான போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாற்றுப்பாதையில் சென்ற வாகனங்கள்

மேலும் நேற்று மாலை 4.10 மணியில் இருந்து 5.40 மணி வரை நாச்சியார்பேட்டை ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் போலீசார் வாகனங்களை விருத்தாசலம் கடைவீதி வழியாக எருமனூர் சாலைக்கு செல்லும் வகையில் மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர்.

இதனால் வாகன ஓட்டிகள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

மேலும் ஒரே நேரத்தில் வந்த 2 எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நடுவழியில் சுமார் ¾ மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்