பழவேற்காடு ஏரியில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த வெளிநாட்டுப் பறவைகள் - வனத்துறையினர் ஆய்வு

‘ஊசிவால் வாத்து’ என அழைக்கப்படும் பறவைகள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து பழவேற்காடு ஏரிக்கு வருகின்றன.

Update: 2024-02-16 12:08 GMT

சென்னை,

இந்தியாவின் 2-வது மிகப்பெரிய ஏரியான பழவேற்காடு ஏரியில், நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் இனப்பெருக்கத்திற்காக ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் வருகின்றன. அவ்வாறு வரக்கூடிய பறவைகளில் ஒன்று 'நார்த்தன் பின்டெயில்'(Northern Pintail). இந்த பறவைகள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து சுமார் 7 ஆயிரம் கி.மீ. தூரம் பயணித்து பழவேற்காடு ஏரிக்கு வருகின்றன.

இந்த 'நார்த்தன் பின்டெயில்' பறவை, தமிழில் 'ஊசிவால் வாத்து' என்று அழைக்கப்படுகிறது. இந்த பறவைகள் மிக வேகமாக பறக்கக் கூடிவை ஆகும். இவற்றை 'பறக்கும் விமானம்' என்றும் அழைக்கின்றனர். சுமார் 1,800 கி.மீ. வரை நிற்காமல் பறக்கும் ஆற்றல் கொண்ட இந்த பறவைகள், பழவேற்காடு ஏரிக்கு அதிக அளவில் வருகை தருகின்றன.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பழவேற்காடு ஏரியில் சுமார் 80-க்கும் மேற்பட்ட ஊசிவால் வாத்துகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள், உயிரிழந்த ஊசிவால் வாத்துகளை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேப்பேரியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அதேசமயம், இந்த பறவைகள் உயிரிழந்து கிடந்த பகுதியில் இருந்து தண்ணீரின் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் கால்நடை மருத்துவத்துறை அதிகாரிகளும் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். ஏரியில் ஏதேனும் விஷத்தன்மை கொண்ட பொருட்கள் கலக்கப்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Full View


Tags:    

மேலும் செய்திகள்