நுண் உரங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது

வேலூர் மாநகராட்சியில் உற்பத்தி செய்யப்படும் நுண் உரங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது என வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறினார்.

Update: 2022-08-19 16:17 GMT

காட்பாடி

வேலூர் மாநகராட்சியில் உற்பத்தி செய்யப்படும் நுண் உரங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது என வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறினார்.

கலெக்டர் ஆய்வு

காட்பாடி காந்திநகரில் வேலூர் மாநகராட்சி மூலம் தூய்மை பணியாளர்கள் வீடுகளின் வாசலில் தரம் பிரித்து வைக்கப்பட்டுள்ள மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை எடுத்துச் செல்கின்றனர்.

அதனை இன்று வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வீடு, வீடாக சென்று பார்வையிட்டு காலை ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். காந்திநகர் பகுதியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

பின்னர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

காட்பாடி காந்திநகர் பகுதியில் 44 தெருக்கள் உள்ளன. இந்த 44 தெருக்களில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து கொட்டப்படும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை மையத்தில் தரம் பிரித்து நுண் உரம் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஈரப்பதம் இருக்கக் கூடிய பொருட்களும் நுண் உரமாக தயாரிக்கப்படுகிறது. பொதுமக்கள் அட்டை பெட்டிகள், காகிதங்கள், காகிதப் பைகள், துணிமணிகள், பிளாஸ்டிக் ஆகியவற்றை தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

குப்பைகளோடு சேர்த்து போட வேண்டாம். அதே போன்று பால் பாக்கெட்டுகள், தயிர் பாக்கெட்டுகள், இலைகள் ஆகியவற்றை தனியாக எடுத்து வைத்து மாநகராட்சியிலிருந்து வரும் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

நுண் உரங்கள் இலவசம்

இந்த திடக்கழிவு மேலாண்மை மையத்தில் தினமும் 850 கிலோ முதல் ஆயிரம் கிலோ வரை நுண் உரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நுண் உரங்களை மாநகராட்சி முழுவதும் 52 இடங்களில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலும் பேரூராட்கள், நகராட்சி பகுதிகளிலிருந்து கொட்டப்படும் கோழி கழிவுகள் தனியாக உரமாக தயாரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது மாநகராட்சி மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், உதவி கமிஷனர் செந்தில், சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்