நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? - ஆதவ் அர்ஜுனா பதிவு
மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி ஆதவ் அர்ஜுனா பதிவு ஒன்றை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
சென்னை,
மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மகாகவி பாரதியாரை போற்றும் வகையில் அவரது கவிதை வரிகளை குறிப்பிட்டு ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
"இந்திய நாட்டின் சுதந்திர வேட்கைக்குத் தனது கவிதை வரிகளால் உயிரூட்டியவர். அடக்குமுறைக்கு எதிரான சிந்தனைகளைத் தனது பாடல்களில் உருவாக்கியவர். 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று சாதிக்கு எதிரான குரலை உரத்து முழங்கியவர், பெண்ணடிமை ஆதிக்கத்தையும் எதிர்த்து நின்றார். வறுமையான வாழ்வு தன்னை சூழ்ந்தபோதும் தான் கொண்ட கொள்கை இலட்சியத்தைக் கைவிடாதவர். நான் சோர்வடையும் பல நேரங்களில் எனக்கு உற்சாகம் கொடுக்கும் கவிதைகளை இயற்றிய மகாகவி பாரதியின் பிறந்தநாளைப் போற்றுவோம்.
தேடிச் சோறுநிதந் தின்று — பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்
வாடித் துன்பமிக உழன்று — பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து — நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் — பல
வேடிக்கை மனிதரைப் போலே — நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ?.." என்று தெரிவித்துள்ளார்.