தமிழக சுகாதாரத் துறையை சீரமைக்க வேண்டும்- அண்ணாமலை
அதிக மக்கள்தொகை இருக்கும் நகரங்களில் கூட, போதுமான எண்ணிக்கையில் அரசு மருத்துவர்கள் இல்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.;
சென்னை,
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் பிரசவம் பார்த்ததால், குழந்தை இறந்துவிட்டதாக வந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. குழந்தையின் பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.
சமீபகாலமாக, தமிழக சுகாதாரத் துறையில், இது போன்ற வருந்தத்தக்க சம்பவங்கள் அதிகமாகியிருக்கின்றன. சென்னை போன்ற சில பகுதிகளில் மட்டும் மருத்துவக் கட்டமைப்பு மற்றும் மக்கள்தொகைக்கேற்ப மருத்துவர்கள் எண்ணிக்கை விகிதம், உலக சுகாதார மையத்தின் பரிந்துரையின்படி இருக்கிறதே தவிர, தமிழகம் முழுவதும் பரவலாக இல்லை.
அதிக மக்கள்தொகை இருக்கும் நகரங்களில் கூட, போதுமான எண்ணிக்கையில் அரசு மருத்துவர்கள் இல்லை. சென்னையை மட்டும் வைத்து, மருத்துவக் கட்டமைப்பில் முதலிடத்தில் இருக்கிறோம் என்று பெருமை பேசுவதோடு, தங்கள் வேலை முடிந்து விட்டது என்று நடந்து கொள்கிறது திமுக அரசு.
தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து மக்களுக்கும் போதுமான கட்டமைப்பு இருக்கும்படி, மருத்துவ வசதிகளையும், மருத்துவர் எண்ணிக்கைகளையும் பரவலாக்க வேண்டும் என்றும், தொடர்ந்து பொதுமக்களைப் பாதிப்புக்குள்ளாக்கும் தமிழக சுகாதாரத் துறையைச் சீரமைக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.