இந்த ஆண்டுமேட்டூர் அணை பாசன தேவையை பூர்த்தி செய்யுமா?மழையை எதிர்நோக்கும் விவசாயிகள்

Update:2023-08-02 02:05 IST

மேட்டூர்

மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பை பார்க்கும் போது இந்த ஆண்டு பாசன தேவையை மேட்டூர் அணையை பூர்த்தி செய்யுமாஎன்பது கேள்விக்குறியாக மாறி உள்ளது.

மேட்டூர் அணை

மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூன்மாதம் 12-ந் தேதிக்கு முன்னதாகவோ அல்லது காலதாமதமாகவோ தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்திற்கு முன்னதாகவே தொடங்கியது. இதன் எதிரொலியாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மே மாதம் முதலே அதிகரிக்க தொடங்கியது. இதை கருத்தில் கொண்டு கடந்தாண்டு மே மாதம் 24-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அப்போது பருவமழை அதிதீவிரமடைந்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு அதிகபட்சமாக வினாடிக்கு 2 லட்சம் கன அடி வரை தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்து இதன் காரணமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 16-ந் தேதி உச்சபட்ச நீர்மட்டமான 120 அடியை எட்டி அணைநிரம்பியது.

உபரிநீர் வெளியேற்றம்

இதைத்தொடர்ந்தும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே வந்ததால் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையில் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டபோது அடங்காத காளையை அடக்கி வைத்தது போல் தண்ணீர் பீறிட்டு பலத்த ஓசையுடன் வெளியேறியது. அதாவது 16 கண் மதகுகள் வழியாக அதிகபட்சமாக வினாடிக்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

அணைக்கு நீர்வரத்து குறையும் நேரங்களில் உபரி நீர் திறப்பு குறைந்தும் நீர்வரத்து அதிகரிக்கும் நேரங்களில் உபரி நீர் திறப்பு அதிகரித்து மாறி மாறி திறந்து விடப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் மேட்டூர் அணை நிரம்பி கடல் போல் காட்சி அளித்தது மட்டுமின்றி அணையின் உபரி நீர் போக்கில் தண்ணீர் பீறிட்டு வெளியேறும் அழகினை காண்பதற்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் மேட்டூர் வந்த வண்ணம் இருந்தார்கள்.

இதனால் மேட்டூர் தங்கமாபுரிப்பட்டணம் பகுதியில் அமைந்துள்ள புதுப் பாலத்தில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காட்சியளித்தது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததன் எதிரொலியாக மேட்டூருக்கு சுற்றுலா பயணிகள் வரத்துஅதிகரித்தது.

குட்டையாக மாறியது

ஆனால் இந்த ஆண்டு நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. ஜூலை மாதம் முடிவடையும் நேரத்தில் கூட ஜூன் மாதத்தில் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை இதுவரை தொடங்கப்படவில்லை. இதனால் மேட்டூர் அணைக்கு போதுமான நீர்வரத்து இன்றி தற்போது மேட்டூர் அணை காண்பதற்கு குட்டை போல் காட்சியளிக்கிறது.

அணையில் இருந்து ஜனவரி மாதம் முடிய டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட வேண்டிய நிலையில் தற்போது உள்ள அணையின் நீர் இருப்பை வைத்து பாசன தேவை முற்றிலும் பூர்த்தி செய்ய முடியுமா என்ற அச்சம் விவசாயிகள் மட்டுமின்றி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு மத்திய அரசிடம் கர்நாடகத்தில் இருந்து தண்ணீரைத் திறந்து விட வலியுறுத்தி வருகிறது. இதேபோன்று தமிழக விவசாயிகளும் கர்நாடகாவில் இருந்து தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

விவசாயிகள் எதிர்பார்ப்பு

கடந்த ஆண்டு மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றபட்டது மட்டுமின்றி மேட்டூர் உபரி நீர் திட்டத்தின் மூலம் பயன்பெறும் ஏரிகளுக்கு தண்ணீரும் திறந்து விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ஆண்டைப் பொறுத்தவரை நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. தண்ணீருக்காக கர்நாடக மாநிலத்திடமும், மத்திய அரசிடமும் கையேந்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

கடந்தாண்டில் இதே காலக்கட்டத்தில் வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி நீர் பீறிட்டு பாய்ந்த 16 கண் மதகுகள் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு தண்ணீருக்காக எங்கும் நிலைஉள்ளது.

கடந்த ஆண்டு டெல்டா பாசன தேவையை பூர்த்தி செய்து சேலம் மாவட்டத்தின் உபரி நீர் திட்டமான சரபங்கா திட்டத்திற்கு தண்ணீர் அளித்த மேட்டூர் அணை இந்த ஆண்டு டெல்டா பாசனத்தை மட்டுமாவது பூர்த்தி செய்யுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் விவசாயிகள் வருணபகவானை எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்