சமூகத்தையும், பொருளாதாரத்தையும் இணைப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது

சமூகத்தையும், பொருளாதாரத்தையும் இணைப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது

Update: 2022-11-18 20:16 GMT

சமூகத்தையும், பொருளாதாரத்தையும் இணைப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என தஞ்சையில் கி.வீரமணி கூறினார்.

விரோதமானது

தஞ்சை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சமூகத்தையும், பொருளாதாரத்தையும் இணைப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. எண்ணெய்யையும், தண்ணீரையும் சேர்க்க முடியாது என்பது அடிப்படை தத்துவம். அதுபோலத்தான் சமூகத்தையும், பொருளாதாரத்தையும் இணைக்கும் செயல் உள்ளது. இந்த பிரச்சினையில் அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர்., அண்ணா, ஜெயலலிதா பாதையில் செல்லாமல், மோடி பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பிற்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரிக்கவில்லை. ஆணையம் அமைப்பது, வேறு அளவுகோல் வைப்பது என வெவ்வேறு யோசனைகளை தான் அந்த கட்சியினர் கூறி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியில் பலர் மாறுபட்ட கருத்துகளை கூறி வருகின்றனர். நாங்கள் கூறிய கருத்துகளையும் ஆதரித்துள்ளனர்.

மறுசீராய்வு மனு

10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது நிலைப்பாட்டை உடனடியாக எடுத்து, சட்ட போராட்டத்துக்கு தேவையான பணிகளை தொடங்கி விட்டார். இதேபோல சமூக அமைப்புகளும் தயாராகி விட்டன. எனவே ஒருபுறம் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யக்கூடிய சட்ட ரீதியான போராட்டம் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் இருக்கும்.

மறுபுறம் மற்ற அமைப்புகளை இணைத்து திராவிடர் கழகம் நடத்திய கூட்டத்தில் இந்த விவகாரத்தை ஒவ்வொரு ஊரிலும் மக்கள் இயக்கமாக நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் தவறான செய்திகள் பரப்பப்படுவதால் அதுகுறித்து மக்களிடம் தெளிவாக எடுத்துக்கூற வேண்டும் என்பதற்காக இயக்கம் நடத்துவதற்கான பணி வேகமாக நடந்து வருகிறது.

கூட்டம்

அனைத்து முற்போக்கு கருத்துள்ள, 10 சதவீதத்தை எதிர்க்கக்கூடிய அனைத்து கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்கும் கூட்டம் சென்னையில் விரைவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பங்கேற்க செய்வதற்காக, அவரிடம் தேதி கேட்பது எனவும் அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக வக்கீல்கள் சங்கம் சார்பில் நடந்த சட்ட நாள் விழா கருத்தரங்கத்தில் கி.வீரமணி பங்கேற்று பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்