மகளிர் தினத்தில் உறுப்பினர் சேர்க்கை - விஜய் தீவிரம்
கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க தமிழக வெற்றிக் கழகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.;
சென்னை,
நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த மாதம் 2ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் யாருக்கும் ஆதரவு இல்லை எனவும் அறிவித்ததோடு 2026 -ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க தமிழக வெற்றிக் கழகம் இலக்கு நிர்ணயித்து அதற்கான பணிகளை தொடங்கியுள்ள நிலையில் உறுப்பினர் சேர்க்கை குறித்தான தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
ஏற்கனவே ஆன்லைன் செயலி மூலம் தமிழகம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை நடத்த விஜய் மக்கள் இயக்கம் திட்டமிட்டு இருந்த நிலையில் அது எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்கள் மத்தியிலும் கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை பணிகள் வரும் 8 -ம் தேதியில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை அணியின் செயலாளர் மகளிர் என்பதால் மகளிர் தினத்தன்று உறுப்பினர் சேர்க்கை அணி அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.