வாக்கு வங்கிக்காக எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டம் மக்களிடம் நம்பிக்கை பெறாது; ஜி.கே.வாசன் பேட்டி
வாக்கு வங்கிக்காக எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டம் மக்களிடம் நம்பிக்கை பெறாது என்று ஜி.கே.வாசன் கூறினார்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒத்த கருத்து ஏற்படாத எதிர்க்கட்சிகளின் கூட்டம் முதல் சுற்றிலேயே நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க தவறி தோல்வி அடைந்துள்ளது. அந்தந்த மாநிலத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க முடியாத தலைவர்கள் நாட்டு மக்களின் பிரச்சினையை தீர்க்க நினைப்பது சாத்தியமற்றது. பலமுறை ஒத்த கருத்துடன் சேர்வதாக கூறி பல முரண்பாடுகளால் அவர்களுடைய கூட்டணி முறிந்துள்ளது. ஆகவே இந்தமுறையும் அவ்வாறே நடக்க வாய்ப்பு இருக்கிறது.
சாதி, மத, பேதமின்றி 9 ஆண்டுகாலம் நாட்டை வளர்ச்சி பாதையில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. அழைத்து செல்கிறது. இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் கூட்டம்போட்டு பெரும்பான்மை, சிறுபான்மை என பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபடுவது எடுபடாது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குவங்கிக்காக அவர்கள் நடத்தும் இது போன்ற கூட்டம் மக்களின் நம்பிக்கையை ஒருபோதும் பெறாது.
உலக அளவில் பிரதமர் மோடி இந்தியாவுக்கு மிகப்பெரிய மரியாதையை மட்டுமல்லாமல், இந்தியர்களை மேலும் மதிக்கிற சூழலை அமெரிக்க பயணத்தில் ஏற்படுத்தி இருக்கிறார். தமிழகத்தில் தேர்தல் முடிந்தவுடனேயே டாஸ்மாக் கடைகளுக்கு மூடுவிழா நடத்தப்படும் என நினைத்து தான் பெரும்பான்மையான மக்கள் தி.மு.க.வுக்கு வாக்களித்தார்கள். ஆனால் வாக்களித்த மக்களை ஏமாற்றும் விதமாக டாஸ்மாக் கடைகளை அரசு நடத்தி வருகிறது.
கவர்னர் ஆர்.என்.ரவி ஜனநாயகத்துக்குட்பட்டு தனது கருத்தை கூறி வருகிறார். காழ்ப்புணர்ச்சி காரணமாக அவர் கூறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் கண்மூடித்தனமாக அர்த்தம் கற்பிப்பது சரியல்ல. பா.ஜ.க., அ.தி.மு.க., தமிழ்மாநில காங்கிரஸ் உள்ளிட்ட ஒத்த கருத்துள்ள கட்சிகள் கூட்டணியுடன் செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணியில் மேலும் கட்சிகள் சேர வாய்ப்பு இருக்கிறது. தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கின் காரணமாக எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.