கீழக்கரை,
கீழக்கரை நகர் மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ஹமீது சுல்தான், நகராட்சி கமிஷனர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியாளர் அருள், துப்புரவு ஆய்வாளர் பரகத்துல்லா, இளநிலை உதவியாளர்கள் தமிழ்ச்செல்வன், உதயகுமார், சரவணகுமார் உள்பட நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கீழக்கரையில் புகையிலை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று அனைத்து கவுன்சிலர்களும் உறுதிமொழி எடுத்தனர்.
கூட்டத்தில் கவுன்சிலர் முகமது பாதுஷா கூறுகையில், எனது பகுதியில் தார்சாலை அமைக்கும் போது கவுன்சிலர்களுக்கு தகவல் கொடுத்து பழைய தார்சாலைகளை அகற்றிவிட்டு புதிய தார்சாலை போட வேண்டும். கவுன்சிலர் சூரியகலா, அம்மா உணவகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 3 மாதம் சம்பளம் வழங்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். சப்ராஸ் நவாஸ், தெற்கு தெரு பகுதியில் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைப்பது குறித்து கவுன்சிலர்களிடம் ஆலோசனை கேட்காமல் அனைத்து பணிகளும் நிறைவேற்றப்பட்டு தீர்மானம் வைக்கப்பட்டுள்ளதை கண்டிப்பதாக கூறினார். பவித்ரா, இதுவரை எங்கள் வார்டுக்கு எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை என்றார். நசீருதின், நகராட்சி கமிஷனர் தினமும் கீழக்கரையில் அனைத்து வார்டுகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றார். ஹாஜா சுஐபு, கீழக்கரையில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், கவுன்சிலர்கள் முகமது காசிம் மரக்காயர், மீரான் அலி, சித்தீக், பயாஸ்தீன் உள்பட அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.