புதுமண்டபத்தில் உலா வந்து எழுந்தருளிய மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர்

வைகாசி வசந்த விழாவையொட்டி புதுமண்டபத்தில் உலா வந்து மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் எழுந்தருளினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-06-03 20:18 GMT

மதுரை, 

வைகாசி வசந்த விழாவையொட்டி புதுமண்டபத்தில் உலா வந்து மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் எழுந்தருளினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வைகாசி வசந்த விழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாதம் தோறும் திருவிழா நடைபெறும். அதில் வைகாசி மாதத்தில் நடைபெறும் வசந்த திருவிழா புதுமண்டபத்தில் நடக்கும். குறிப்பாக இந்த ஆண்டு, புதுமண்டபத்தில் இருந்த அனைத்து கடைகளும் அகற்றப்பட்டு, அகழியில் தண்ணீர் நிரப்பப்பட்டு வெகு விமரிசையாக திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதுபோல், புது மண்டபம் வண்ண வண்ண மலர்களாலும், பழங்களாலும், மின்விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அதன்படி, வைகாசி வசந்த திருவிழா நேற்று மாலை தொடங்கியது. கோவிலில் இருந்து மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் - பிரியாவிடையுடன் பரிவார மூர்த்திகளுடன் புறப்பட்டு அம்மன் சன்னதி, கீழ ஆவணி மூல வீதி வழியாக புதுமண்டபத்திற்குள் எழுந்தருளினர்.

அங்கு மீனாட்சி, சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க மண்டபத்தை சுற்றி 3 முறை வலம் வந்து பின்னர் மைய மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர், சாமிக்கு சிறப்பு தீபாராதனைகள், பூஜைகள் நடைபெற்றது.

கடைகள் இன்றி...

கடந்த காலங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் வசந்த விழாவில் புதுமண்டபத்தில் தண்ணீர் இன்றி, ஏராளமான கடைகளுக்கு இடையே சாமி உலா வரும். இந்த நிலையில் இந்தாண்டு புதுமண்டபத்தில் உள்ள கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு பழங்காலத்தில் நடைபெற்றது போல மண்டபத்தைச் சுற்றி அகழியில் தண்ணீர் நிரப்பப்பட்டு, உலா நடந்து மைய மண்டபத்தில் சாமி-அம்மன் எழுந்தருளினர்.கடைகள் அகற்றப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் புதுமண்டபத்தில் அமர்ந்து சாமியை தரிசிக்க முடிந்தது.

நிறைவு நாள்

இந்த வைகாசி வசந்த உற்சவமானது வருகிற 12-ந் தேதி வரை நடக்கிறது.

முதலாம் நாள் முதல் 9-ம் திருநாள் வரை மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் எனும் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு தினமும் மாலை 6 மணி அளவில் நடக்கும்.

அதை தொடர்ந்து கோவிலில் இருந்து சுவாமிகள் புறப்பட்டு புது மண்டபம் சென்று, அங்கு வீதி உலா- தீபாராதனை நடத்தப்படும். பின்பு சுவாமிகள், 4 சித்திரை வீதிகளிலும் வலம் வந்து கோவிலை சென்றடைவர்.

12-ந்தேதி அன்று காலையிலேயே சுவாமிகள் புது மண்டபத்தில் எழுந்தருளி பகல் முழுவதும் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். அன்றைய தினம் மாலையில் அபிஷேகம், தீபாராதனை முடிந்து சித்திரை வீதி உலா நடைபெறும்.

Tags:    

மேலும் செய்திகள்