வீடுதோறும் மூலிகைப் பண்ணை அமைக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை மூலம் மானிய விலையில் மூலிகை நாற்றுகள் வழங்கப்படுகிறது.

வீடுதோறும் மூலிகைப் பண்ணை அமைக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை மூலம் மானிய விலையில் மூலிகை நாற்றுகள் வழங்கப்படுகிறது.

Update: 2022-11-25 14:29 GMT

போடிப்பட்டி,

வீடுதோறும் மூலிகைப் பண்ணை அமைக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை மூலம் மானிய விலையில் மூலிகை நாற்றுகள் வழங்கப்படுகிறது.

பாட்டி வைத்தியம்

உணவே மருந்து என்ற நிலையிலிருந்து மருந்தே உணவு என்ற நிலைக்கு படிப்படியாக மாறி வருகிறோம். இதனால் வீதிகள் தோறும் ஆஸ்பத்திரிகள் என்ற நிலை படிப்படியாக உருவாகி வருகிறது. முதியவர்கள் மட்டுமல்லாமல் இளையவர்களும், கூடவே மாத்திரை டப்பாவை கொண்டு செல்லும் அவல நிலை உருவாகி வருகிறது. இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நாம் நமது வாழ்வியலைத் தொலைத்து விட்டு செயற்கை உணவுகளுக்கு அடிமையாகிப் போனதால் வந்த அவலம் இது என்று சொல்லலாம்.

ஒரு வியாதி வந்தால் அதனைத் தீர்க்க ஒரு மருந்து, பின்னர் அந்த மருந்தினால் வரும் பக்க விளைவுகளைத் தவிர்க்க மற்றொரு மருந்து என மருந்துக்கு மேல் மருந்து என்ற நிலை உருவாகி விட்டது. எனவே மீண்டும் இயற்கைக்குத் திரும்பும் ஆர்வம் பலருக்கு உருவாகத் தொடங்கியுள்ளது. வீட்டுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலையிலிருந்த நமது பாட்டி வைத்தியத்தின் மேல் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த வைத்திய வழிமுறைகளை சொல்லித் தருவதற்கு பாட்டிகள் இல்லை என்றாலும் அதுகுறித்த தகவல்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கிறது.

மூலிகைச் செடிகள்

இப்போது மக்களுக்கு பிரச்சினையாக இருப்பது இந்த மூலிகைகள் எங்கே கிடைக்கும் என்பதாகத் தான் இருக்கிறது. அந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில் வீட்டிலேயே மூலிகைத் தோட்டம் அமைக்க விரும்புபவர்களுக்கு தோட்டக்கலைத்துறை மூலம் மானிய விலையில் மூலிகை நாற்றுகள் வழங்கப்படவுள்ளது. அதன்படி துளசி, கற்பூரவல்லி, திருநீற்றுப்பச்சிலை, ஆடாதொடை, வல்லாரை, திப்பிலி, அஸ்வகந்தா, பிரண்டை, கற்றாழை, கீழாநெல்லி போன்ற 10 வகையான மூலிகைச் செடிகளில், வகைக்கு 2 செடிகள் வீதம் வீட்டுக்கு 20 மூலிகைச்செடிகள் வழங்கப்படவுள்ளது.

மாநில தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ரூ. 1500 மதிப்புள்ள இந்த மூலிகைச் செடிகள் 50 சதவீத மானியத்தில் ரூ. 750-க்கு வழங்கப்படுகிறது.அதனை பெற்று பயனடைய விரும்புபவர்கள் உடுமலை, குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.துணை தோட்டக்கலை அலுவலர்கள் சிவானந்தன்-9944937010 (குடிமங்கலம்), பிரியங்கா-9565075473 (உடுமலை) என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Tags:    

மேலும் செய்திகள்