கலெக்டர் அலுவலகத்தை மக்களை தேடி மருத்துவம் ஊழியர்கள் முற்றுகை

கலெக்டர் அலுவலகத்தை மக்களை தேடி மருத்துவம் ஊழியர்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2022-11-14 19:16 GMT

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது பெரம்பலூர் மாவட்ட மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கொளஞ்சி, செயலாளர் செல்வி, பொருளாளர் வேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 95 பேர் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு மாத ஊதியமாக ரூ.4 ஆயிரத்து 500 தான் வழங்கப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு எங்களை தொற்று நோய் மருத்துவ பிரிவில் பணி செய்ய நியமனம் செய்யப்பட்டு, தற்போது மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு என மாற்றம் செய்யப்பட்டது. இதனால் எங்களுக்கு பணிச்சுமைதான் கூடுதலாக தரப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு-ஊக்கத்தொகை

ஆனால் அதற்கான ஊதிய உயர்வு, ஊக்கத்தொகை எதுவும் வழங்கப்படவில்லை. வேலைக்கான உபகரணங்களை வாங்கி கொடுப்பதில்லை. எனவே எங்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்கவும், ஊக்கத் தொகை வழங்கவும், உபகரணங்கள் வாங்கி கொடுக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும், என்றனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்களில் சிலர் சென்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்