கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது. இதற்கு சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க கோரி விண்ணப்பித்திருந்த 18 வயதுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகள் 156 பேர் கலந்து கொண்டனர். இதில் அரசு டாக்டர்களான எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர் பாலசுப்பிரமணி, கண் மருத்துவர் காயத்ரி, மன நல மருத்துவர் உஷா நந்தினி, காது, மூக்கு, தொண்டை மருத்துவர் வாசவி ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனைகள் செய்து, தேர்வு செய்தனர். முகாமின்போது மாற்றுத்திறனாளி குழந்தைகள் 2 பேருக்கு ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டது.