மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்

கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்குகிறது.

Update: 2023-09-09 19:28 GMT

கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடையாள அட்டை

கடலூர் மாவட்டத்தில் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும், வீட்டு வழி கல்வியில் பயிற்சி பெற்று வரும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கும் மருத்துவ முகாம், அளவீட்டு முகாம்கள் மற்றும் அடையாள அட்டை வழங்கும் முகாம் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் அக்டோபர் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் தகுதியுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படும். மருத்துவ முகாம்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும்.

மதிப்பீட்டு முகாம்

இந்த முகாம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் பி.முட்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை மறுநாளும், குறிஞ்சிப்பாடி ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்(மேற்கு) 14-ந் தேதியும், புவனகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் (மேற்கு) 15-ந் தேதியும், குமராட்சி ஒன்றியம், கொற்றன்குடி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 19-ந் தேதியும், நல்லூர் ஒன்றியம் பெண்ணாடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் (மேற்கு) 21-ந் தேதியும், நெல்லிக்குப்பம் டேனிஷ் மிஷன் தொடக்கப்பள்ளியில் 22-ந் தேதியும், பண்ருட்டி டேனிஷ் மிஷன் தொடக்கப்பள்ளியில் 25-ந் தேதியும், காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 26-ந் தேதியும் முகாம் நடைபெற உள்ளது. இதேபோல் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 27-ந் தேதியும், நெய்வேலி ஒன்றியம், பிளாக்-9 என்.எல்.சி நடுநிலைப்பள்ளியில் அடுத்த மாதம்(அக்டோபர்) 3-ந் தேதியும், விருத்தாசலம் கஸ்பா, டேனிஷ் மிஷன் நடுநிலைப்பள்ளியில் 5-ந் தேதியும், திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ந் தேதியும், கம்மாபுரம் ஒன்றியம் வேப்பங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 9-ந் தேதியும், கடலூர் ஒன்றியம் புதுப்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 10-ந் தேதியும் முகாம் நடைபெறுகிறது. இதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் மருத்துவ மற்றும் மதிப்பீட்டு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்