தென்னைநார் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை

தென்னைநார் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொள்ளாச்சியில் நடந்த மறு ஆய்வு கூட்டத்தில் கயிறு வாரிய மண்டல தலைவர் பேசினார்.

Update: 2023-07-14 20:00 GMT

பொள்ளாச்சி

தென்னைநார் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொள்ளாச்சியில் நடந்த மறு ஆய்வு கூட்டத்தில் கயிறு வாரிய மண்டல தலைவர் பேசினார்.

மறு ஆய்வு கூட்டம்

மத்திய அரசின் கயிறு வாரியம் மூலம் பாரம்பரிய அடிப்படையிலான காயர் கூட்டுக்குழுமம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டுக்குழுமங்கள் மூலம் கால்மிதியடி, மெத்தை, கயிறு, தரைவிரிப்பு என பல்வேறு மதிப்பு கூட்டுப்பொருட்கள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் பொள்ளாச்சியில் கயிறு வாரியம் மூலம் கூட்டுக்குழுமங்களால் மறு ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கயிறு வாரிய கோவை மண்டல தலைவர் சபு தலைமை தாங்கினார். கூட்டுக்குழுமங்களில் வளர்ச்சி பிரிவு தலைவர் சியாமளா கலந்துகொண்டு பேசினார். இதில் தொழில்நுட்ப அதிகாரி சேகர், ஆய்வாளர் வித்யாதரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

ரூ.50 கோடி மானியம்

இதுகுறித்து கயிறு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

மத்திய அரசின் கயிறு வாரியத்தின் மூலமாக 14 கூட்டுக்குழுமங்கள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த குழுமங்கள் மூலம் தென்னை நாரில் இருந்து கால்மிதி, மெத்தை, பிரஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரித்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக தொழில் பாதிக்கப்பட்டது. தற்போது எந்த பிரச்சினையும் இல்லை. இருப்பினும் தொழிற்சாலைகளை சரியாக இயக்காததால் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே தொழிற்சாலைகளை தொடர்ந்து நடத்துவதில் என்ன பிரச்சினை உள்ளது, ஏன் உற்பத்தியை செய்யவில்லை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கூட்டுக்குழுமங்களுக்கு இதுவரை ரூ.50 கோடி வரை மானியம் வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்