கிருஷ்ணன்கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேயர் ஆய்வு
கிருஷ்ணன்கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேயர் ஆய்வு செய்தார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சி மக்களுக்கு குடிநீர் தடையின்றி வழங்க ரூ.296 கோடியில் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் நடக்கின்றன. இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் புத்தன் அணையில் இருந்து கொண்டு வரப்படும் தண்ணீரை கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்து வழங்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மேயர் மகேஷ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில்,"சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தரமான முறையில் செய்து விரைவில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கப்படும்" என்றார்.
இதைத் தொடர்ந்து 30-வது வார்டுக்கு உட்பட்ட கமலா தெரு, வெள்ளாளர் மேல தெரு, சிதம்பரநாதர் தெரு பகுதியில் ரூ.80.70 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம் மற்றும் சாலை சீரமைப்பு பணி, 39-வது வார்டு பாவாகாசீம் கொத்துபா பள்ளி முன் ரூ.6.10 லட்சம் மதிப்பில் அலங்கார தரை கற்கள் பதிக்கும் பணி ஆகிய பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். ஆய்வின்போது மாநகர பொறியாளர் பாலசுப்பிரமணியன், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் கோபாலகிருஷ்ணன், உதவி நிர்வாக பொறியாளர்கள் முருகன், காந்தி, பாக்கியராஜ், சுகாதார ஆய்வாளர் ராஜா, தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.
---