கண்களில் கருப்பு துணி கட்டி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாணவி மரணத்துக்கு நீதிகேட்டு திண்டுக்கல்லில், மாதர் சங்கத்தினர் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-09-21 19:00 GMT

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்துக்கு நீதி கேட்டு, திண்டுக்கல் பஸ் நிலையம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவி சுமதி தலைமை தாங்கினார். மாநில துணை தலைவியும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாலபாரதி கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ராணி, மாநிலக்குழு உறுப்பினர் வனஜா, மாவட்ட பொருளாளர் பாண்டியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கண்களில் கருப்பு துணியை கட்டி பங்கேற்றனர். அப்போது மாணவி மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.

ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி பேசுகையில், மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக சந்தேக மரணம் என்று போலீசாரும், தற்கொலை என சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர் இதனால் குற்றவாளிகளை தப்ப வைக்க முயற்சி நடக்கிறதோ? என்ற சந்தேகம் எழுகிறது.

எனவே மாணவி மரணம் குறித்து 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும். மேலும் அந்த வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்துவோம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்