விக்கிரவாண்டி அருகே கொத்தனார் அடித்துக் கொலை; அண்ணன்-தம்பி கைது

விக்கிரவாண்டி அருகே கொத்தனாரை அடித்துக் கொன்ற அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-03 18:45 GMT

விக்கிரவாண்டி, 

முன்விரோதம்

விக்கிரவாண்டி அருகே தும்பூர்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன்கள் ரமேஷ்( வயது 48), சுரேஷ்( 38). இருவரும் கொத்தனார் வேலை செய்து வந்தனர்.

இவர்களுக்கும், அதே ஊரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன்கள் செல்வகுமார்(46), ஜெயக்குமார்( 38) ஆகியோருக்கும் வீடு கட்டி கொடுத்தது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

தாக்குதல்

இந்நிலையில் கடந்த 1-ந்தேதி மாலை ரமேசும், சுரேசும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த செல்வகுமார், ஜெயக்குமார் ஆகிய 2 பேரும் சேர்ந்து ரமேசை வழிமறித்து முன்விரோதம் காரணமாக திட்டி தாக்கினர். இதைபார்த்த சுரேஷ் அவர்களை தடுக்க முயன்றார். இதில் மேலும் ஆத்திரமடைந்த செல்வகுமாரும், ஜெயக்குமாரும் சேர்ந்து இரும்பு குழாயால் சுரேசை தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த சுரேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இது குறித்த புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

சிகிச்சை பலனின்றி சாவு

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கெடார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார், தாக்குதல் வழக்கை, கொலை வழக்காக மாற்றி பதிந்து செல்வகுமார், ஜெயக்குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்