அரசு ஆஸ்பத்திரிகளுக்கு முகக்கவசம் அணிந்து வந்த பணியாளர்கள்
கொரோனா பரவலை தடுக்க நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு முகக்கவசம் அணிந்து வந்த பணியாளர்கள் நோயாளிகள், பொதுமக்களும் அணிய அறிவுறுத்தினர்.
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே மத்திய சுகாதாரத்துறை, மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுஉள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைவாக இருந்தபோதிலும், அரசு ஆஸ்பத்திரிகளில் முகக்கவசம் அணிவது நேற்று முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் நேற்று அரசு தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என அனைத்து மருத்துவமனைகளிலும் டாக்டர்கள், செவிலியர்கள், டெக்னீசியன்கள், உதவியாளர்கள் என அனைத்து தரப்பினரும் முகக்கவசம் அணிந்து பணிக்கு வந்தனர். ஆனால் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வந்த பொதுமக்கள் ஒருசிலர் மட்டுமே முகக்கவசம் அணிந்து வந்தனர். எனவே மருத்துவத்துறை அலுவலர்கள் அனைவரையும் முகக்கவசம் அணிந்து வருமாறு அறிவுறுத்தினர்.