விருத்தாசலம் காய்கறி மார்க்கெட்டில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம் காய்கறி மார்க்கெட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் காய்கறி மார்க்கெட்டில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மார்க்கெட் கிளை தலைவர் இதயத்துல்லா தலைமை தாங்கினார். நகர குழு மார்க்கெட் சேகர், சத்தியா, கவிதா, கர்ணன், தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் அசோகன், மாவட்ட குழு உறுப்பினர் கலைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர்.
ஆர்ப்பாட்டமானது, விருத்தாசலம் தினசரி காய்கறி மார்க்கெட்டில் மூடி கிடக்கும் கட்டண கழிவறையை திறந்துவிடக் கோரியும், மார்க்கெட் வளாகத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும், சாலை விரிவாக்கத்தின் போது சேதமடைந்த கழிவுநீர் கால்வாயை உடனடியாக சரி செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.
தகவல் அறிந்து விரைந்து வந்த நகராட்சி ஆணையர் சேகர் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து உடனடியாக கழிவறையை திறந்து விடுவதற்கான ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்ததன் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.