திருமண ஆசைகாட்டி பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி - போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
திருமண ஆசைகாட்டி பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.;
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஏசுராஜ் (வயது 19). இவர் சேத்துப்பட்டு பகுதியில் வசிக்கும் பிளஸ்-2 மாணவியை காதலிப்பதாக கூறி, அவரை பின் தொடர்ந்து சுற்றி வந்துள்ளார். ஏசுராஜின் காதல் வலையில், அந்த மாணவி சிக்கவில்லை என்று தெரிகிறது. நேற்று முன்தினம் மாணவி தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ஏசுராஜ் மாணவியின் வீட்டுக்குள் புகுந்து, அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி, கட்டிப்பிடித்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டார். மேலும் பாலியல் பலாத்காரம் செய்யவும் முயன்றார்.
ஏசுராஜை தள்ளி விட்டு, வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்த மாணவி, அக்கம், பக்கத்தினர் உதவியுடன் ஏசுராஜை பிடித்து, கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஏசுராஜை கைது செய்தனர். 9-ம் வகுப்பு வரை படித்துள்ள ஏசுராஜ், வேலை ஏதும் செய்யாமல் ஊர் சுற்றியதாக தெரிகிறது.