மெரினா கடற்கரை லூப் சாலை விவகாரம்: மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை - மாநகராட்சி தகவல்

சென்னை மெரினா கடற்கரை லூப் சாலை விவகாரத்தில், மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Update: 2023-04-20 07:07 GMT

சென்னை மெரினா கடற்கரை நொச்சிக்குப்பம் லூப் சாலையில் மீனவர்கள் நலனுக்காக போக்குவரத்துக்கு இடையூறின்றி செல்லும் வகையிலும், பொதுமக்கள் எளிதாக மீன்கள் வாங்கிச்செல்லும் வகையிலும் பெருநகர சென்னை மாநகராட்சியால் ரூ.10 கோடியில் நவீன மீன் மார்க்கெட் கட்டப்பட்டு வருகிறது.

இந்த நவீன மீன் மார்க்கெட்டில் 384 கடைகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கடைகளுக்கு வந்து, செல்லும் மக்களின் வசதிக்காக 60 நான்கு சக்கர வாகனங்களும், 155 இருசக்கர வாகனங்களும் நிறுத்துவதற்கு இடவசதி செய்யப்பட்டுள்ளது.

மீன் கடைகளின் மேற்கூரை 'சிந்தடிக் சீட்'டால் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு தனிப்பட்ட கடைக்கும் தண்ணீர் வசதியும், கழுவும் வசதியும், மின் வசதியும் செய்யப்படுகிறது. கழிவுநீர் அகற்றும் வசதியும், கழிவறை மற்றும் குடிநீர் வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தபணி 6 மாதத்தில் முடிவடையும்.

இந்தநிலையில் சென்னை மெரினா கடற்கரை நொச்சிக்குப்பம் லூப் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறின்றி ஒழுங்குபடுத்த சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி, காவல்துறையுடன் இணைந்து நொச்சிக்குப்பம் லூப் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறின்றி ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

மீனவர்களின் நலனுக்காக தற்போது மெரினா நொச்சிக்குப்பம் லூப் சாலையில் கிழக்கு பக்கம் வியாபாரம் செய்ய கோர்ட்டு தெரிவித்தபடி அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது மீனவர்களின் நலன் கருதி நொச்சிக்குப்பம் லூப் சாலையின் மேற்கு பகுதியில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறின்றி உள்ள இடத்தில் மீனவர்கள் மீன் விற்பனை செய்ய எளிதாக இருக்கும் வகையிலும், மீனவர்கள் வாழ்வாதாரத்தை காத்திடும் வகையிலும் சென்னை மாநகராட்சியால் நடவடிக்கைகைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று சென்னை மாநகராட்சி சார்பில், சென்னை ஐகோர்ட்டில் நேற்று தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு இந்த வழக்கின் விசாரணையை வருகிற ஜூன் மாதம் 19-ந் தேதி ஒத்திவைத்துள்ளது.

மேற்கண்ட தகவல் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்