மண்மேட்டு புற்று மாரியம்மன் கோவில் திருவிழா
மண்மேட்டு புற்று மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
குளித்தலை அருகே உள்ள திம்மம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கணக்கப்பிள்ளையூரில் மண்மேட்டு புற்று மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி இப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பலர் நேற்று குளித்தலை கடம்பந்துறை காவிரி நதிக்கரைக்கு வந்தனர். பின்னர் ஆற்றில் இருந்து தீர்த்தகுடம், பால்குடம், கரும்பு தொட்டில் மற்றும் அழகு குத்திக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். குளித்தலை பஸ் நிலையம், பெரியபாலம், தண்ணீர்பள்ளி, பரளி, கருங்கலாப்பள்ளி ஆகிய ஊர்கள் வழியாக நடந்து சென்று கணக்கப்பிள்ளையூரில் உள்ள கோவிலை சென்றடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் பல்வேறு பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த திருவிழாவிற்கான ஏற்பாட்டினை விழா குழுவினர் செய்திருந்தனர்.