விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் கைதிகளை வெட்டிய 7 பேரை பிடிக்க தேடுதல் வேட்டை

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து கைதிகளை வெட்டிய 7 பேர் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்..

Update: 2023-04-19 19:05 GMT


விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து கைதிகளை வெட்டிய 7 பேர் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்..

கொலை சம்பவங்கள்

திண்டுக்கல் மாவட்டம் வேடப்பட்டி அபிராமி நகரை சேர்ந்தவர் யுவராஜ் என்ற யுவராஜ்குமார் (வயது 29). இவரது நண்பர் குணா. விறகு வெட்டும் தொழிலாளி.

குணாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவருக்கும் சம்பளம் கொடுப்பதில் பிரச்சினை ஏற்பட்டது.

இந்தநிலையில் கடந்த ஆண்டு சின்னத்தம்பி தரப்பினரால் குணா கொலை செய்யப்பட்டார். இதற்கு பழிவாங்க கடந்த மார்ச் 2-ந் தேதி யுவராஜ், அவரது நண்பர் விக்னேஷ் மற்றும் குணா தரப்பினர் சேர்ந்து சின்னத்தம்பியை படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கடந்த மார்ச் 6-ந் தேதி திண்டுக்கல் தாலுகா போலீசார், யுவராஜ் மற்றும் விக்னேசை கைது செய்து விருதுநகர் சிறையில் அடைத்தனர்.

சம்பவத்தின் போது விக்னேஷ், யுவராஜ் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டதால் 2 பேரும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில், 4-வது தளத்தில் பொது வார்டில் சிகிச்சை பெற்று வந்தனர் அங்கு பாதுகாப்புக்கு திண்டுக்கல் ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் பால்செல்வம் தலைமையில் 3 போலீசார் பணி அமர்த்தப்பட்டனர்.

7 பேர் கும்பல்

நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் திண்டுக்கல்லை சேர்ந்த போத்திராஜ், நட்டுராயன், அருண், கொலையுண்ட சின்னத்தம்பியின் சகோதரர் விஜி, ஒலிசை ராமச்சந்திரன், சோனை என்ற செல்வம் உள்பட 7 பேர் கும்பல் யுவராஜ், விக்னேஷ் அனுமதிக்கப்பட்டு இருந்த பொதுவார்டில் நுழைந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் போலீஸ்காரர்கள் சிலம்பரசன் மற்றும் அழகுராஜ் இருந்தனர்.

போலீஸ்காரர்கள் மீது மிளகாய் பொடியை வீசிவிட்டு, அந்த கும்பலை சேர்ந்தவர்கள் யுவராஜ், விக்னேஷ் ஆகியோரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. போலீஸ்காரர்கள் பதிலடி நடவடிக்ைகயை தொடர்ந்து 7 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இந்த தாக்குதலில் போலீஸ்காரர் சிலம்பரசன், சிகிச்ைசயில் இருந்த யுவராஜ், விக்னேஷ் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர்.

தனிப்படைகள்

இந்த சம்பவத்தால் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்ற நோயாளிகள் நிலை குலைந்தனர். விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து நேரடியாக விசாரணை நடத்தினார்.

மேலும் அரசு ஆஸ்பத்திரியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பார்வையிட்டு கேட்டறிந்தார். போலீஸ்காரர் சிலம்பரசனிடமும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து யுவராஜ் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார், போத்திராஜ் உள்பட 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் 7 பேைர பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வச்சகாரப்பட்டி ராம்தாஸ், விருதுநகர் புறநகர் மாரிமுத்து, கிருஷ்ணன் கோவில் முத்துக்குமார், திருத்தங்கல் முத்துக்குமார் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

கொலை வழக்கு கைதிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தனி வாடில் அனுமதிக்கப்படாமல் பொதுவார்டில் அனுமதிக்கப்பட்டது ஏன் என்று தெரியவில்லை. இதனால் கொலை முயற்சியில் ஈடுபட்ட கும்பலை போலீசாரால் மடக்கி பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அரசு ஆஸ்பத்திரியில் 5 நுழைவுவாயில்கள் உள்ள நிலையில் ஒரு வாயிலில் மட்டுமே பாதுகாப்பு பணியில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆஸ்பத்திரிக்கு வருவோரை முறையாக கண்காணித்து இருந்தால் இந்த வன்முறை கும்பலை முன்பே தடுத்திருக்க முடியும். இனிவரும் காலங்களிலாவது இம்மாதிரியான சம்பவம் அரசு ஆஸ்பத்திரியில் நடைபெறாத வண்ணம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இந்த சம்பவம் குறித்து தினத்தந்தி நிருபரிடம், போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசு ஆஸ்பத்திரியில் நுழைந்து கொலை முயற்சியில் ஈடுபட்ட 7 பேரை இரவுக்குள் பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்