குரோம்பேட்டையில் மசூதியில் மயங்கி விழுந்தவர் சாவு - ரம்ஜான் பண்டிகையில் சோகம்

குரோம்பேட்டையில் மசூதியில் மயங்கி விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-04-23 06:30 GMT

சென்னையை அடுத்த குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் பகுதியில் உள்ள மசூதியில் நேற்று ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. பின்னர் ரம்ஜான் பண்டிகை நாட்களில் மசூதியில் பல்வேறு பணிகளை செய்தவர்களுக்கு மசூதி ரம்ஜான் கமிட்டி சார்பில் பணம் கொடுக்கப்பட்டது.

அஸ்தினாபுரம், திருமலை நகர் பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ்(வயது 55) என்பவருக்கு ரூ.1,200 கொடுத்தனர். இது தொடர்பாக முகமது ரியாசுக்கும், கமிட்டி செயலாளர் பாஷா என்ற அதிக்குர் ரகுமானுக்கும் வாய்த்தகராறு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர்.

பின்னர் அங்குள்ள தண்ணீர் தொட்டி அருகே அமர்ந்திருந்த முகமது ரியாஸ் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

முகமது ரியாசின் நெற்றியில் காயம் இருந்ததால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் பயாஸ் அளித்த புகாரின்பேரில் சிட்லப்பாக்கம் போலீசார் சந்தேகம் மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உயிரிழந்த முகமது ரியாஸ் இருதய நோய்க்கு ஆஞ்சியோ சிகிச்சை பெற்றுள்ளார். அவர் மசூதியில் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது உடல் நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தபோது நெற்றியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் இறந்தாரா? அல்லது இருதய பாதிப்பு காரணமா? என்பது பிரேத பரிசோதனை முடிவில் தான் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

ரம்ஜான் பண்டிகையன்று மசூதியில் நடைபெற்ற இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்