ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் திருடியவர் கைது

திருச்சியில் இருந்து கோவைக்கு ரெயிலில் வந்த ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.1½ லட்சம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-09 22:30 GMT


கோவை


திருச்சியில் இருந்து கோவைக்கு ரெயிலில் வந்த ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.1½ லட்சம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.


ஓய்வு பெற்ற ஆசிரியர்


திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 60), ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது பேத்தி கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் பேத்தியின் கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக நடராஜன் கடந்த 7-ந் தேதி திருச்சியில் இருந்து கோவைக்கு செம்மொழி விரைவு ரெயிலில் வந்தார்.


பின்னர் பயண அலுப்பு காரணமாக நடராஜன் அங்கிருந்த நடைமேடையில் படுத்து தூங்கி விட்டார். சுமார் 1 மணி நேரம் கழித்து கண்விழித்து பார்த்தபோது அவர் பையில் வைத்திருந்த பணம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை காணவில்லை. இதனால் அவர் பதறியபடி பணம் வைத்திருந்த பையை நடைமேடையில் தேடி அலைந்தார்.


கண்காணிப்பு கேமரா


நீண்ட நேரம் தேடியும் பணம் கிடைக்காததால், நடராஜன் கோவை ரெயில் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கூடுதல் டி.ஜி.பி. வனிதா உத்தரவின் பேரில், போலீஸ் சூப்பிரண்டு பொன்ராம், துணை சூப்பிரண்டு யாஸ்மின் வழிகாட்டுதலின் பேரில் பணத்தை திருடி சென்ற நபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.


இந்த தனிப்படையினர் ரெயில் நிலைய வளாகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் பணத்தை திருடியது கோவை கண்ணப்பநகரை சேர்ந்த முருகன் (59) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் பணத்தை மீட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட முருகன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Tags:    

மேலும் செய்திகள்