செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி மாமல்லபுரம் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி - பேரூராட்சி துறை ஆணையர் பங்கேற்பு

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதையொட்டி மாமல்லபுரம் கடற்கரையை தூய்மைப் படுத்தும் பணி நடந்தது. இதில் பேரூராட்சி துறை ஆணையர் செல்வராஜ் பங்கேற்றார்.

Update: 2022-06-12 08:28 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை மாதம் 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக அனைத்து துறைகளையும் முடுக்கிவிட்டு தமிழக அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில் கோடை விடுமுறையையொட்டி குவிந்த சுற்றுலா பயணிகளால் கடற்கரை பகுதி முழுவதும் ஆங்காங்கே குப்பைகள் சிதறி கிடந்தன.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளதால் கடற்கரையை தூய்மையாக வைத்திருக்க வலியுறுத்தி தமிழக பேரூராட்சி துறை ஆணையர் செல்வராஜ் தலைமையில் நேற்று கடற்கரை கோவில் வளாகத்தில் துப்புரவு பணியாளர்கள், நடைபாதை வியாபாரிகள், நீச்சல் படை வீரர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் நகரை தூய்மையாக வைத்திருப்போம். பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டோம், பிளாஸ்டிக்கை விற்பனை செய்ய மாட்டோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் மாமல்லபுரம் கடற்கரையை தூய்மை படுத்தும் பணி தொடங்கப்பட்டது. இதில் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், பேரூராட்சிகள் துறை ஆணையருமான செல்வராஜ் துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து கடற்கரையில் சிதறி கிடந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தார். தொடந்து துப்புரவு பணியாளர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கடற்கரை முழுவதும் சுற்றி, சுற்றி வந்து பிளாஸ்டிக் பாட்டில்கள், உணவு கழிவுகள், கிழிந்த துணிகள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர்.

மேலும் கடற்கரையில் உள்ள அனைத்து வியாபாரிகளையும் அழைத்து என்ன மாதிரியான அடிப்படை வசதிகள் வேண்டும் என்று பேரூராட்சிகள் துறை ஆணையர் செல்வராஜ் கேட்டார். அவரிடம், குடிநீர் வசதி வேண்டும் என்று கடற்கரை நடைபாதை வியாபாரிகள் முறையிட்டனர். பின்னர் மாமல்லபுரம் நகரின் முக்கிய பகுதிகளுக்கு சென்ற பேரூராட்சிகள் துறை ஆணையர் சுகாதாரம், குடிநீர் வசதி, சாலை வசதிகள், தெரு விளக்கு வசதிகள் என அனைத்து அடிப்படை வசதிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அவருடன் காஞ்சீபுரம் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், பேரூராட்சி தணைத்தலைவர் ராகவன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்