மாலைமேட்டில் மாலையம்மன் கோவில் திருவிழா
தோகைமலை அருகே மாலைமேட்டில் மாலையம்மன் கோவில் திருவிழாவையொட்டி நாயக்கர் இனமக்கள் தேவராட்டம் ஆடினர்.
கோவில் திருவிழா
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே கள்ளை ஊராட்சி மாலைமேட்டில் பிரசித்தி பெற்ற மாலையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 1994-ம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. பிறகு அதே ஆண்டு கோவிலில் இருந்த அத்தி மரத்தாலான சிலை திருட்டு போனது. இதனால் கிராம மக்கள் திருவிழாவை நடத்தவில்லை. இதற்கிடையில் திருடுபோன சிலையை மர்மநபர்கள் கடந்த மாதம் கோவில் அருகே போட்டு விட்டு சென்றனர். இதையடுத்து கோவிலில் வைத்து சிலைக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது இந்தாண்டு திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அப்போது திருவிழா நடத்துவது தொடர்பாக 2 ஊர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது.
இதையடுத்து விழா கமிட்டியினர் முன்னிலையில் தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் 2 ஊர் மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஜனவரி 18-ந்தேதி காலை 6 மணி முதல் மதியம் 12 வரை தொப்பாநாயக்கன்பட்டி, கள்ளை சேர்ந்த கம்பளத்து நாயக்கர் இனமக்கள் திருவிழா நடத்தவும், அதேநாளில் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை பேரூர், குப்பமேட்டுபட்டி நாயக்கர் இன மக்கள் திருவிழா நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டது.
தேவராட்டம்
அதனைதொடர்ந்து நேற்று காலை தொப்பாநாயக்கன்பட்டி, கள்ளை சேர்ந்த நாயக்கர் இனமக்கள் ஆண்கள் கையில் குச்சியுடன் மேல் சட்டை அணியாமல் தாங்கள் வளர்த்து வரும் காளை மாடுகளுடன் மாலையம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் மாடுகளுக்கு சந்தனம் பூசி வழிபாடு செய்தனர். பின்னர் மாடுகளை தங்கள் கையில் பிடித்து கொண்டு கோவிலை சுற்றி ஓடி வந்தனர். பின்னர் அனைத்து மாடுகளையும் ஒன்றாக அழைத்து கொத்து கொம்பு என்ற இடத்தில் ஓடவிட்டனர். அதன்பிறகு தங்களின் பாரம்பரிய நடனமான தேவராட்டம், ஒயிலாட்டம் மற்றும் கோமாளி ஆட்டம் ஆடினர்.
அதேபோல் பேரூர் மற்றும் குப்பமேட்டுபட்டியை சேர்ந்த நாயக்கர் இன மக்களும் தங்களுக்கு ஒதுக்கபட்ட நேரத்தில் சாமி மாடுகளுடன் வந்து மாலையம்மனை வழிபாடு செய்தனர்.