மழவந்தாங்கல் அரசு தொடக்கப்பள்ளியில் அடிப்படை வசதிகள் வேண்டும்-மாணவர்கள் மனு

மழவந்தாங்கல் அரசு தொடக்கப்பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவர்கள் அல்லல்படுகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென அவர்கள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2023-10-16 18:31 GMT

கலெக்டரிடம் மாணவர்கள் மனு

செஞ்சி தாலுகா மழவந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்து வரும் மாணவ-மாணவிகள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாங்கள் மழவந்தாங்கல் அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வருகிறோம். எங்கள் பள்ளியில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை.

குறிப்பாக பள்ளியை சுற்றிலும் மதில் சுவர் வசதி இல்லை. இதனால் ஆடு, மாடுகள் மற்றும் நாய்கள், பள்ளி வளாகத்தில் சுற்றித்திரிகின்றன. சில சமயங்களில் அவை பள்ளி வகுப்பறைக்குள் வந்துவிடுகிறது. இது எங்களுக்கு பெரும் இடையூறாக இருப்பதோடு நாங்கள் ஒருவித அச்சத்துடனேயே கல்வி பயின்று வருகின்றோம்.

அடிப்படை வசதிகள்

மேலும் எங்கள் பள்ளியில் கழிவறை வசதியும் இல்லை. இதனால் நாங்கள் அருகில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிக்கு சென்றுதான் சிறுநீர் கழித்து வருகிறோம். அந்த ஏரியில் தற்போது தண்ணீர் அதிகளவில் உள்ளதால் எங்களுக்கு பாதுகாப்பும் இல்லை. சில சமயங்களில் வீட்டிற்கு சென்று வரக்கூடிய நிலைமை ஏற்படுவதால் மிகவும் சிரமமாக உள்ளது.

எங்களுடைய பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் நாங்கள் பாதுகாப்பாக, அமைதியாக படிக்க முடியவில்லை.

எனவே எங்கள் பள்ளியில் மதில் சுவர் கட்டித்தருவதோடு கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித்தர மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற மாவட்ட கலெக்டர் பழனி, இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்