பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கு - தி.மு.க. எம்.எல்.ஏ. மகன், மருமகளுக்கு ஜாமீன்

நீலாங்கரை காவல்நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது.;

Update:2024-03-01 15:15 IST

சென்னை,

பணிப்பெண்ணை துன்புறுத்தியது தொடர்பான வழக்கில் பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மர்லினா ஆகியோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு கடந்த மாதம் 28-ந்தேதி நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பணிப்பெண்ணை தங்களது வீட்டுப் பெண்ணைப் போல மனுதாரர்கள் நடத்தியுள்ளனர் என்றும், மனுதாரர்களுக்கு எதிராக பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.

இதையடுத்து பணிப்பெண் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பணிப்பெண்ணுக்கு மிகவும் கொடூரமாக அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை எந்த ஒரு விசாரணையும் மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கு காவல்துறை தரப்பு பதில் என்ன என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது இந்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்த காவல்துறை அவகாசம் கோரியது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, தனி மனித உரிமை சார்ந்த வழக்குகளில் காவல்துறை மெத்தனப் போக்குடன் நடந்து கொள்வது ஏன்? என கேள்வி எழுப்பினார். இதையடுத்து 2 தினங்களுக்குள் காவல்துறை பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை தரப்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கு தொடர்பாக 16 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், புலன் விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் காவல்துறையின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 2 வாரங்களுக்கு நீலாங்கரை காவல்நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன் மற்றும் மருமகள் ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 


Full View


Tags:    

மேலும் செய்திகள்