உப்பிலியபுரம்:
உப்பிலியபுரத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவர், ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து தேர்வு எழுதினார். இந்த தேர்வில் தோல்வியடைந்ததையடுத்து அவரை பெற்றோர் திட்டியதால், அவர் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். இது குறித்த புகாரின்பேரில் உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் போலீசார், மாயமான அந்த மாணவரை தேடி வந்தனர். நேற்று காலை முசிறி பஸ் நிலையத்தில் அந்த மாணவர் சுற்றித்திரிவதாக கிடைத்த தகவலின்பேரில், போலீசார் அங்கு விரைந்து சென்று, அந்த மாணவரை மீட்டு, அவருக்கு அறிவுரை கூறி, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் காட்டுப்புத்தூர் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவர் 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தார். இதனால் பெற்றோர் திட்டுவார்கள் என்று பயந்து வீட்டில் இருந்து அந்த மாணவர் வெளியேறி மாயமானார். இது குறித்த புகாரின்பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் விசாரணை நடத்தி நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் இருந்த அந்த மாணவரை மீட்டு அறிவுரை கூறி, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.