ரூ. 120 கோடி செலவில் மதுராந்தகம் ஏரி தூர்வாரும் பணி தொடக்கம்

மதுராந்தகம் ஏரி தூர்வாரும் பணி தொடங்கிய நிலையில் ஏரியின் கரை உடைக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Update: 2022-06-27 08:59 GMT

மதுராந்தகம்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்று மதுராந்தகம் ஏரி. இந்த ஏரி 50 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் இருந்து வந்தது. இதனால் ஏரியின் மொத்த உயரமான 23.3 அடியில் 10 அடிக்கு மேல் மண்ணால் தூர்ந்து இருந்தது.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழைக்கு பின்னர் மதுராந்தகம் ஏரி நிரம்பி முழு கொள்ளளளவை எட்டினாலும் அடியில் மண் சேர்ந்திருப்பதால் மழை நீரை கூடுதலாக சேமிக்க முடியாமல் ஏரி நிரம்பி வீணாக உபரி நீர் கடலில் சென்று கலந்து வந்தது.

இதையடுத்து மதுராந்தகம் ஏரியை தூர் வார வேண்டும் என்று மதுராந்தகம் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் கடந்த 50 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து ஏரியை தூர் வார தமிழக அரசு ரூ.120 கோடி ஒதுக்கியது.

அதன்படி, கடந்த ஜூன் மாதம் 6-ந் தேதி மதுராந்தகம் ஏரியை தூர்வாருவதற்கான பூமி பூஜைகள் நடத்தப்பட்டன. ரூ.120 கோடி செலவில் ஏரியை ஆழப்படுத்தி தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல், நீர்வரத்து கால்வாய் சீரமைத்தல், மதகுகள் மற்றும் பாசன கால்வாயை சீரமைத்தல் பணி நடைபெற இருக்கிறது.

தூர் வாரும் பணிக்காக மதுராந்தகம் ஏரியில் இருந்து மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு பல்லவன் குளம் ஏரி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் பின்னர் ஏரியில் மீதமுள்ள நீரை வெளியேற்றுவதற்கு தானியங்கி ஷட்டர் அருகே ஜே.சி.பி எந்திரம் கொண்டு ஏரியின் கரை உடைக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் ஏரியில் உள்ள அனைத்து நீரும் முழுமையாக வெளியேற்றப்பட்டு விடும். அதன் பின்னர், ஏரியில் நீர் சேகரமாகும் பகுதியினை நான்காகப் பிரித்து விரைந்து தூர்வாரி ஆழப்படுத்துவ தற்காக பணிகளை மேற்கொள்வதாக பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவ மழைக்கு முன்னதாக ஏரியை ஆழப்படுத்தி தூர்வாரும் பணியை விரைந்து செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்