ஈஞ்சம்பள்ளி மதுரை வீரன் சாமி கோவிலில்தங்கத்தேர் ஊர்வலத்தை நடத்த அனுமதிகலெக்டரிடம் பொதுமக்கள் மனு

ஈஞ்சம்பள்ளி மதுரை வீரன் சாமி கோவிலில் தங்கத்தேர் ஊர்வலத்தை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2023-08-15 00:34 GMT

ஈஞ்சம்பள்ளி மதுரை வீரன் சாமி கோவிலில் தங்கத்தேர் ஊர்வலத்தை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

தங்கத்தேர் ஊர்வலம்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார்.

மொடக்குறிச்சி மாவட்டம் ஈஞ்சம்பள்ளி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது:-

ஈரோடு, திருப்பூர் மற்றும் நாமக்கல் ஆகிய 3 மாவட்ட மக்களின் குல தெய்வமாக மதுரைவீரன் சாமி உள்ளது. இந்தநிலையில் கடந்த மாதம் மதுரை வீரன் சாமி தங்கத்தேர் ஊர்வலம் மற்ற மாவட்டங்களில் நடந்தது. அங்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. அதன்படி ஈஞ்சம்பள்ளி பகுதியிலும் எந்த பிரச்சினையும் ஏற்படாது. எனவே எங்கள் பகுதியில் மதுரை வீரன் சாமி தங்கத்தேர் ஊர்வலத்தை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

பணி இடமாற்றம்

பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் கொடுத்த மனுவில் கூறுகையில், 'பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அய்யப்பன் என்ற டாக்டர் சிகிச்சை அளித்து வருகிறார். அவர் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கிறார். இந்தநிலையில் அவரை தஞ்சாவூர் மாவட்டத்துக்கு பணி இடம் மாற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் மாறி சென்றுவிட்டால் அவரிடம் சிகிச்சை பெறும் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் எனவே டாக்டர் அய்யப்பனின் பணி இடமாறுதலை ரத்து செய்துவிட்டு, அவரை ஈரோடு மாவட்டத்திலேயே பணி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

அடிப்படை வசதிகள்

ஈரோடு அருகே உள்ள மேட்டுநாசுவம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம்.

இங்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இங்குள்ள கிணறுகளில் பாதுகாப்பு வேலிகள் இல்லை. இதனால் கடந்த ஆண்டு ஒருவர் எதிர்பாராதவிதமாக விழுந்து உயிரிழந்துவிட்டார். அதேபோல் இந்த ஆண்டும் ஒருவர் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துவிட்டார். எனவே எங்கள் பகுதியில் உயிர் பழி வாங்கிய கிணறுகளில் பாதுகாப்பு வேலி அமைத்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்றனர்.

274 மனுக்கள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 274 மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, தனித்துனை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜகோபால், மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நல அதிகாரி கோதைசெல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி ரங்கநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்