மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா -நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் வருகிற 30-ந் தேதி மீனாட்சி பட்டாபிஷேகம் நடக்கிறது.

Update: 2023-04-21 21:04 GMT

-

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் வருகிற 30-ந் தேதி மீனாட்சி பட்டாபிஷேகம் நடக்கிறது.

மீனாட்சி கோவில்  சித்திரை திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெறும். இதில் பிரம்மோற்சவ விழாவாக சித்திரை திருவிழா கொண்டாடப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு திருவிழாவும் தீர்த்தம் என்று சொல்லக்கூடிய திருவிழா நிறைவு நாளை முடிவு செய்து கொண்டு தொடங்க பெறுவதாகும். அதன்படி சித்திரை தீர்த்தத்தை கணக்கில் கொண்டு அமாவாசை கழித்த இரண்டொரு நாளில் கார்த்திகை நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் சித்திரை பெருவிழா தொடங்கும். விழா தொடங்குவதையொட்டி கோவிலில் இன்று (22-ந் தேதி) வாஸ்து சாந்தி நடக்கிறது.

12 நாட்கள் நடைபெறும் இந்த சித்திரை திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 10.35 மணிக்கு மேல் 10.54 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. அன்றைய தினத்தில் இருந்து மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமிகள் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர். விழாவில் வருகிற 30-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், மே மாதம் 1-ந் தேதி திக்கு விஜயமும் நடைபெறுகிறது.

மீனாட்சி திருக்கல்யாணம்

விழாவில் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் மே மாதம் 2-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வுகள் வடக்கு, மேற்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும். இதற்காக அந்த பகுதியில் பக்தர்கள் அமர்வதற்காக பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருக்கல்யாண விழாவில் இரவு மீனாட்சி அம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார்.

திருக்கல்யாணத்திற்கு மறுநாள் மே 3-ந் தேதி மாசி வீதிகளில் தேர் திருவிழா நடைபெறுகிறது. இதைதொடர்ந்து 14-ந் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், துணை கமிஷனர் அருணாசலம் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா

மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா மே மாதம் 1-ந் தேதி தொடங்குகிறது. இதற்கான கொட்டகை முகூர்த்த விழா மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் நடந்தது. அதனை தொடர்ந்து மே மாதம் 3-ம் தேதி அழகர்கோவிலில் இருந்து சுந்தரராஜப் பெருமாள் என்ற அழகர், கள்ளழகர் வேடம் அணிந்து மதுரை நோக்கி வருகிறார். 4-ந் தேதி அழகரை மதுரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி புதூர் மூன்றுமாவடி பகுதியில் நடக்கிறது. விழாவில் சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா 5-ந் தேதி காலை 5.45 மணிக்கு மேல் 6.12 மணிக்குள் கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

6-ஆம் தேதி வண்டியூர் வீரராக பெருமாள் கோவிலில் இருந்து சேஷ வாகனத்தில் கள்ளழகர் புறப்பட்டு மண்டுக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், இரவு ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதாரம் நிகழ்வு நடக்கிறது. 7-ம் தேதி அதிகாலை மோகனவதாரத்தில் கள்ளழகர் காட்சியளிக்கிறார்.

அன்று இரவு சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லாக்கு நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 8-ம் தேதி கள்ளழகர் மதுரையில் இருந்து புறப்பட்டு 9-ந் தேதி பகல் 10.32 மணி மேல் 11.30 மணிக்குள் இருப்பிடம் சென்றடைகிறார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெங்கடாசலம், துணை கமிஷனர் ராமசாமி ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்