மதுரை: சுற்றுலா ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி? வெளியான அதிர்ச்சி தகவல்
மதுரையில் சுற்றுலா ரெயில் பெட்டியில் ஏற்பட்ட தீ மளமளவென அடுத்தடுத்த பெட்டிகளுக்கு பரவியதில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
மதுரை,
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து ஆன்மீக சுற்றுலா செல்லும் பயணிகளை ஏற்றி கொண்டு ரெயில் ஒன்று கடந்த 17-ந்தேதி தமிழகம் வந்தடைந்தது. நாகர்கோவிலில் பத்மநாபசுவாமி கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்துள்ளனர். இதனை முடித்து விட்டு பக்தர்கள் அனைவரும் மதுரைக்கு திரும்பியுள்ளனர்.
சுற்றுலாவுக்கு பயணிகளை ஏற்றி வந்த ரெயிலானது, மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள மதுரை போடி லைன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
திடீர் தீ விபத்து
இந்த நிலையில், ரெயில் பெட்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. அது மளமளவென பற்றி எரிந்து அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் பரவியது. அப்போது, ரெயிலில் கடைசியாக இருந்த சிறப்பு முன்பதிவு ரெயில் பெட்டியில் 90 பேர் இருந்துள்ளனர். தீ விபத்து பற்றி அறிந்ததும் 60-க்கும் மேற்பட்டோர் கீழே குதித்து தப்பியுள்ளனர்.
9 பேர் பலி
எனினும், இந்த தீ விபத்தில் முதலில் 2 பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியானது. பின்னர் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. பலருக்கு காயம் ஏற்பட்டது. சிலருக்கு தீ விபத்து, அதன் தொடர்ச்சியாக எழுந்த புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டது.
அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து சாமி தரிசனம் செய்ய வந்தவர்கள் என கூறப்படுகிறது. இந்த நிலையில், பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
அதிர்ச்சி தகவல்
சுற்றுலா ரெயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி? என்பது பற்றி அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அந்த ரெயில், அதிகாலை 3.47 மணிக்கு புனலூரில் இருந்து மதுரை வந்து சேர்ந்தது. இந்நிலையில், தீ விபத்து ஏற்பட்டது பற்றி காலை 5.20 மணிக்கு தீயணைப்பு துறைக்கு ரெயில்வே துறை தகவல் தெரிவித்தது.
சம்பவ பகுதிக்கு காலை 5.45 மணிக்கு தீயணைப்பு வாகனங்கள் சென்றன. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காலை 7.15 மணிக்கு ரெயிலில் பற்றி எரிந்த தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 பேர் பெண்கள். 5 பேர் ஆண்கள். ஒருவர் அடையாளம் காண முடியாத அளவுக்கு உள்ளார். தீ விபத்து ஏற்பட்டபோது, ரெயில் பெட்டியின் கதவு மூடப்பட்டு இருந்துள்ளது. இதனால், பலர் உடனடியாக தப்பிக்க முடியாமல் போனது என்றும் தகவல் தெரிவிக்கின்றது.
கியாஸ் சிலிண்டர்
ரெயில் பெட்டியில் இருந்த பக்தர்கள் சிலர் காலையில் காபி குடிப்பதற்காக கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி சமைக்க முயன்றுள்ளனர். அப்போது திடீரென சிலிண்டர் வெடித்து தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால், தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அலறியடித்து கொண்டு ரெயிலில் இருந்து கீழே இறங்கி ஓடியுள்ளனர்.
எனினும், சிலர் ரெயில் பெட்டியில் சிக்கி இருக்க கூடும் என கூறப்படுகிறது. இதனால், அந்த பகுதியே போர்க்களம் போன்று காட்சியளித்தது. உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அழுதபடி உள்ளனர்.
ரெயில்வே அதிகாரிகள் வருகை
தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ரெயில்வே அதிகாரிகள், மருத்துவ குழுவினர், பாதுகாப்பு படையினர், வருவாய் துறையினர் சம்பவ பகுதிக்கு வருகை தந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, தீயை அணைக்கும் பணி முழுமையடைந்து உள்ளது. அந்த ரெயில் பெட்டி தனியாக கொண்டு செல்லப்பட்டு உள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இதில், 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. இதுபற்றி மதுரை கலெக்டர் சங்கீதா நேரில் சென்று ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த ரெயில் பெட்டியில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தபோது, மற்றொரு ரெயில் அந்த பகுதியை கடந்து சென்றது. இதனால், ரெயிலில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை ஏற்றி செல்ல அனுமதி இல்லாத நிலையில், இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சம்பவம் நடந்த பகுதிக்கு தெற்கு ரெயில்வேயின் கூடுதல் மேலாளர் கவுசல் கோசல், ரெயில்வே ஐ.ஜி. சந்தோஷ் சந்திரன் ஆகியோர் செல்கின்றனர்.