திருக்குறளை பிரெய்லி புத்தகமாக வெளியிடுவதற்காக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு பாராட்டு

திருக்குறளை பிரெய்லி புத்தகமாக வெளியிடுவதற்காக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்தது.

Update: 2022-10-19 20:00 GMT


திருக்குறளை பிரெய்லி புத்தகமாக வெளியிடுவதற்காக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்தது.

பிரெய்லி முறை

மதுரையை சேர்ந்த வக்கீல் ராம்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் படிப்பதற்கு வசதியாக, தமிழ்-ஆங்கில மொழிகளில் பிரெய்லி முறையில் திருக்குறள் புத்தகங்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது அரசு வக்கீல் திலக்குமார் ஆஜராகி, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட 45 சங்க கால இலக்கிய நூல்கள் பிரெய்லி முறையில் அச்சிடப்பட்டு இலவசமாக வழங்கப்படுகின்றன. பிரெய்லி முறையில் திருக்குறள் புத்தகத்தை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாக்கும் பணி 75 சதவீதம் முடிந்துவிட்டது. பணிகள் முடிந்ததும் இலவசமாக வழங்கப்படும் என்றார்.

பாராட்டு

விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

திருக்குறள் புத்தகத்தை பிரெய்லி முறையில் வெளியிடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதால், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை. அதே நேரம், பிரெய்லி முறையிலான திருக்குறளும், சங்க இலக்கிய நூல்களும் தாராளமாக கிடைக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் பார்வைத்திறன் அற்ற மாற்றுத்திறனாளிகள், இந்த மண்ணின் பெருமையையும், கலாசாரத்தையும் அனுபவிக்க முடியும்.

மனுதாரர் செம்மொழி தமிழாய்வு மையத்தை அணுகி பிரெய்லி திருக்குறள் புத்தகத்தை பெற்றுக் கொள்ளலாம். சங்க இலக்கியங்களை பிரெய்லி புத்தகமாக்கி அறிவையும், இனிமையையும் பெற நடவடிக்கை எடுத்த தமிழக அரசு மற்றும் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் பணியை இந்த கோர்ட்டு பாராட்டுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்