மதுபாட்டில், போதை பொருள் வழக்குகளில் கைதானவர்கள் நிபந்தனை ஜாமீனுக்கான தொகையை அரசு ஆஸ்பத்திரி, பள்ளிகளுக்கு செலுத்த வேண்டும் -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மதுபாட்டில், போதை பொருள் வழக்குகளில் கைதானவர்களுக்கு நிபந்தனை ஜாமீனுக்கான தொகையை அரசு ஆஸ்பத்திரி, பள்ளிகளுக்கு செலுத்த வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-02-11 20:03 GMT


மதுபாட்டில், போதை பொருள் வழக்குகளில் கைதானவர்களுக்கு நிபந்தனை ஜாமீனுக்கான தொகையை அரசு ஆஸ்பத்திரி, பள்ளிகளுக்கு செலுத்த வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

போதைப்பொருள் வழக்கில் கைது

சட்டவிரோதமாக மது பாட்டில்கள் பதுக்கியது, தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்தது போன்ற விவகாரம் தொடர்பான வழக்குகளில் கைதானவர்கள், தங்களுக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விசாரித்து உத்தரவு பிறப்பித்து வருகிறார்.

அபராதம் செலுத்த உத்தரவு

அதன்படி தஞ்சை மாவட்டம் குறிச்சியை சேர்ந்த குலஞ்சிராஜன் என்பவர், 21 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாக பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டார். அவருக்கான நிபந்தனையாக ரூ.30 ஆயிரத்தை மதுரை சுந்தர்ராஜன்பட்டியில் உள்ள இந்திய பார்வையற்றோர் சங்க பள்ளிக்கு செலுத்த வேண்டும் என உத்தரவில் கூறியுள்ளார்.

இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகேயுள்ள தாமரைபாக்கத்தை சேர்ந்தவர் மதியழகன். ரூ.5.65 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலையை பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைதான அவருக்கு ரூ.50 ஆயிரத்தை சிவகங்கை மாவட்டம் சண்முகநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

தஞ்சை மருத்துவ கல்லூரி

தஞ்சை மாவட்டம் வடக்குவாசலை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் 19 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைதான அவர், ரூ.30 ஆயிரத்தை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த பீமராஜன் மற்றும் நெல்லை பாப்பாக்குடியை சேர்ந்த ராஜபெருமாள் ஆகியோர் ரூ.1.63 லட்சம் மதிப்புள்ள புகையிலையை பதுக்கிய வழக்கில் பீமராஜன் ரூ.50 ஆயிரத்தையும், ராஜபெருமாள் ரூ.25 ஆயிரத்தையும் மதுரை மாவட்டம் மேலூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்