பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற வேதிப்பொருட்களால் தயாரித்த விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய தடை- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

வேதிப்பொருட்களால் தயாரித்த விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-09-17 19:49 GMT


வேதிப்பொருட்களால் தயாரித்த விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மேல்முறையீடு

நெல்லை பாளையங்கோட்டையில் வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தயாரிக்கும் விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய தடை விதிப்பதாகவும், அதனை விற்பனை செய்ய அனுமதிக்க நெல்லை மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடக்கோரி நேற்று முன்தினம் மதுரை ஐகோர்ட்டு கிளையில் அவசர வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி சுவாமிநாதன், சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு அவர் தயாரிக்கும் சிலைகளை விற்பனை செய்யலாம். ஆனால் அந்த சிலைகளை ஆற்றில் கரைக்க கூடாது என்றும் சிலைகளை வாங்குபவர்கள் பெயர் மற்றும் முழு முகவரி உள்ளிட்ட விவரங்களை போலீசாருக்கு தெரிவித்து, உறுதிமொழி பத்திரம் எழுதிக்கொடுக்க வேண்டும் என்றும் நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக நேற்று தாக்கல் செய்தார்.

சிலைகள்

அவரது மனுவில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், பசுமை தீர்ப்பாயம், சென்னை ஐகோர்ட்டு ஆகியவற்றின் உத்தரவுகளை குறிப்பிட்டு, மனுதாரர் அரசு விதிகளுக்கு புறம்பாக சிலைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். மத்திய சுற்றுச்சூழல் விதிகளின் படி, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத இயற்கையான களிமண் மற்றும் மூலப்பொருள்கள் கொண்டு தயாரிக்கும் சிலைகளை மட்டும் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும்.

வேதிப்பொருட்கள், ரசாயன வண்ணங்கள், பிளாஸ்டிக், தெர்மோகோல், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் உள்ளிட்ட மனித உடல் நலத்துக்கு தீங்கும் விளைவிக்கும் பொருட்களை கொண்டு தயாரிக்க கூடாது என தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இந்த விதிகளில் எதுவும் மனுதாரர் தயாரிக்கும் சிலைகளில் பின்பற்றப்படவில்லை. சிலை விற்பனைக்கான உரிமத்தை பொறுத்தமட்டில், உள்ளூர் நிர்வாகத்தில் மனு செய்து, அவர்களின் அனுமதி பெற்று உரிமம் கிடைத்தவுடன் தான் சிலைகளை விற்பனை செய்ய வேண்டும் என்று விதிகளில் கூறப்பட்டுள்ளது. மனுதாரர் எவ்வித உரிமமும் பெறாமல் சிலைகளை விற்பனை செய்து வருகிறார். எனவே, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இடைக்கால தடை

இந்த மனு நேற்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் அவசர வழக்காக எடுத்து கொள்ளப்பட்டு நீதிபதிகள் சுந்தர் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் தலைமை கூடுதல் வக்கீல் வீரா கதிரவன் ஆஜராகி வாதிட்டார். விசாரணை முடிவில், பசுமை தீர்ப்பாயம் இந்த விவகாரத்தில் ஏற்கனவே பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த விதிமுறைகள் ஏன் பின்பற்றப்படுவதில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

சென்னை ஐகோர்ட்டு 15 ஆண்டுக்கு முன்னதாகவே, நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா உள்ளிட்டோர் கொண்ட அமர்வு, நச்சு பொருட்கள் கலந்து சிலைகள் செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. இது குறித்து விழிப்புணர்வு இல்லையா? எனவும் கேள்வியெழுப்பினர். அத்துடன், ரசாயனம் கலந்த சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதால் அந்த நீரை பயன்படுத்துபவர்கள் அதிகளவு புற்று நோய் பாதிப்புக்கு ஆளாகின்றனர். எனவே, விஷம் என்பதில் ஒரு துளி விஷம், அதிக விஷம் என்பதில்லை எல்லாமே விஷம் தான். ஆகவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்திக்காக ரசாயன பொருட்கள், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கொண்டு சிலைகள் தயாரிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்படுவதாக உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கின் விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்