திருச்சியில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் பகுதிகளை இடிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிடப் பகுதிகளை இடிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
திருச்சியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அவரது மனுவில், திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா உய்யக்கொண்டான் மலை பகுதியில் சுமார் 51 செண்ட் நிலத்தில் 100 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளதாகவும், இது சுமார் 54 சதவீதம் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருச்சி மாநகராட்சி மற்றும் மாவட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு மதுரை ஐகோர்ட் கிளையில் நீதிபதி சத்யநாராயண பிரசாத், நீதிபதி சகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனுமதியின்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிடப் பகுதிகளை இடிக்க உத்தரவிட்டனர். மேலும் அனுமதியின்றி கட்டடம் கட்டுவதற்கு துணை போன அனைத்து அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இனி இதுபோன்று செயல்படும் அதிகாரிகளை முக்கியத்துவம் இல்லாத பதவிகளுக்கு மாற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இந்த வழக்கில் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை 6 வாரங்களில் நடவடிக்கை எடுக்கத் தவறினால் வருவாய் துறை செயலர் நேரில் ஆஜராக நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தில் வீடு வாங்கி பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிமையாளர் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.