பெயரளவுக்கு செயல்படும் மடத்துக்குளம் ரயில் நிலையம்
பெயரளவுக்கு செயல்படும் மடத்துக்குளம் ரயில் நிலையம்
போடிப்பட்டி
கைவிடப்பட்ட நிலையில் பரிதாபமாக உள்ள மடத்துக்குளம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாததால் பயணிகள் அவதிப்படும் நிலை உள்ளது.
ரயில் பயணம்
இயற்கையை ரசித்துக் கொண்டே பயணம் செய்வதுடன், அலுப்பில்லாத பயணமாகவும் ரயில் பயணம் உள்ளது.தற்போதைய நிலையில் எகிறி அடிக்கும் பஸ் கட்டணத்திலிருந்து பயணிகளை பாதுகாப்பதும் ரயில் பயணங்களாகும்.மேலும் சர்க்கரை வியாதி போன்ற பல பிரச்சினைகளை சுமந்து தவிக்கும் முதியவர்களின் விருப்பத் தேர்வாக கழிவறைகளுடன் கூடிய ரயில் பயணமே உள்ளது.இந்தநிலையில் தாலுகா தலைமையகமான மடத்துக்குளத்தில் உள்ள பழமையான ரயில் நிலையம் பெயரளவுக்கு செயல்படுவதுடன் படிப்படியாக பாழாக்கப்பட்டு வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது'கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி பஸ் நிலையத்துக்கு அருகில் மடத்துக்குளம் ரயில் நிலையம் அமைந்துள்ளது.இந்த பகுதிக்கு அருகிலேயே பேரூராட்சி அலுவலகம், கருவூலம், தாலுகா அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ளது.இதுபோன்ற அமைப்பில் உள்ள ரயில் நிலையத்தை மேம்படுத்துவதன் மூலம் பொதுமக்கள் பெருமளவு பயன் பெறுவார்கள்.ஆனால் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் மிக மோசமான நிலையில் மடத்துக்குளம் ரயில் நிலையம் உள்ளது.
போதை ஆசாமிகள்
இங்கு பாலக்காடு-திருச்செந்தூர், பழனி-கோவை ஆகிய 2 ரயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன.இன்று வரை இந்த ரயில் நிலையத்தில் ரயில் டிக்கட் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்படவில்லை.ரயில் வரும் நேரங்களில் மட்டுமே டிக்கட் கவுண்டர் திறக்கப்பட்டு டிக்கட் வழங்கப்படுகிறது.மற்ற நேரங்களில் பூட்டியே இருப்பதால் ரயில் நிலைய வளாகத்தில் ஏராளமானவர்கள் படுத்து உறங்குகின்றனர்.மேலும் பல போதை ஆசாமிகள் அங்கேயே மது அருந்தி விட்டு பாட்டில்களை உடைத்து எறிந்துள்ளனர்.உடைந்த கண்ணாடித் துண்டுகள் பயணிகளின் காலை பதம் பார்க்கிறது.மேலும் ரயில் நிலையத்திலுள்ள குடிநீர்க் குழாய்கள் சேதப்படுத்தப்பட்டு பயணிகளுக்கு குடிநீர் கிடைக்காத நிலை உள்ளது.ரயில் நிலையத்தின் கழிவறைகளுக்கு தண்ணீர் வசதி இல்லாத நிலையில் ரயில் நிலைய நடைமேடை முழுவதும் கழிவறையாக பயன்படுத்தப்படுகிறது.இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்கள் பரவும் நிலையில் உள்ளது.மேலும் ரயில் நிலைய வளாகத்தில் ஆங்காங்கே சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன.அவை பயணிகளின் உடைகளையும் உடலையும் பதம் பார்க்கின்றன.
மூடப்படும் அபாயம்
ரயில் நிலைய நுழைவாயில் சுவரொட்டிகள் ஒட்டும் இடமாக பயன்படுத்தப்பட்டு அலங்கோலமாக காட்சியளிக்கிறது.மேலும் மேற்கூரையில் மரங்கள் முளைத்து சேதமடைந்து வருகிறது.இவ்வாறு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் செயல்படுவதால் பயணிகள் மடத்துக்குளம் ரயில் நிலையத்துக்கு வருவதை தவிர்க்கும் சூழலை உருவாக்குகிறது.நாளடைவில் பயணிகள் எண்ணிக்கை குறைவதை காரணம் காட்டி ஒட்டுமொத்தமாக ரயில் நிலையத்தை மூடி விடும் அபாயம் உள்ளது.எனவே ரயில் நிலையத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அனைத்து தரப்பினரும் முன்னெடுக்க வேண்டும்.சுற்றுவட்டாரப்பகுதிகளில் காகித ஆலைகள், நூற்பாலைகள் உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் செயல்பட்டு வரும் நிலையில் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் வசதிகள் செய்யப்பட வேண்டும்.மடத்துக்குளம் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்லும் வசதி செய்ய வேண்டும்.மேலும் 24 மணி நேரமும் முன் பதிவு செய்யும் வகையில் டிக்கட் முன் பதிவு எந்திரம் அமைக்க வேண்டும்.ரயில் நிலையத்தில் கண்காணிப்புக் கேமரா அமைத்து சமூக விரோதச் செயல்களை தடுப்பதுடன் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.உரிய பணியாளர்களை நியமித்து ரயில் நிலையத்தை பராமரிக்கவும் பாதுகாக்கவும் வேண்டும்'என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.
-