காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
மடத்துக்குளம் அருகே குடிநீர் கேட்டு தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல்
மடத்துக்குளத்தையடுத்த நரசிங்காபுரம் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நேற்று காலை 7.30 மணியளவில் கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மடத்துக்குளம் போலீசார் அதிகாரிகளிடம் பேசி குடிநீர்ப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தனர்.
இதனையடுத்து போராட்டத்தைக் கைவிட்ட பொதுமக்கள் அதிகாரிகளின் வருகைக்காக சாலை ஓரத்தில் காத்திருந்தனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தும் ஒன்றிய அதிகாரிகளோ, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளோ சம்பவ இடத்துக்கு வரவில்லை. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் மீண்டும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலை கழிவுகள்
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் விரைவில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
நரசிங்காபுரம் பகுதியில் சர்க்கரை ஆலைக்கழிவுகளால் நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது. இதனால் முழுவதுமாக திருமூர்த்தி குடிநீரையே நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.