மடத்துக்குளம் பகுதியில் பரவுகிறதா டெங்கு காய்ச்சல்?

மடத்துக்குளம் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Update: 2023-06-27 15:48 GMT

நோய் பரவல்

டெங்கு காய்ச்சல் என்பது கொசுக்கள் மூலம் பரவக்கூடிய நோய் என்று பொதுவாக கூறப்படுகிறது. ஆனாலும் ஏடிஸ் வகை பெண் கொசுக்கள் கடிப்பதாலேயே இந்த நோய் பரவுகிறது. நோய் பாதிக்கப்பட்டவர்களைக் கடிக்கும் கொசு அந்த வைரஸ் கிருமிகளை சுமந்து சென்று அடுத்தவருக்கு கடத்துகிறது. இவ்வாறு தொடர்ச்சியாக நோய்பரவல் ஒரு சங்கிலித்தொடராக நிகழ்கிறது. இதனைத் தடுப்பதற்கு சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்வது அவசியமாகும். நன்னீர் கொசுக்கள் எனப்படும் இந்த வகை கொசுக்கள் குப்பையில் வீசப்படும் தேங்காய் ஓடு, டயர்கள், பிளாஸ்டிக் கவர்கள் போன்றவற்றில் தேங்கும் சிறிய அளவு நீரிலும் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். அதுமட்டுமல்லாமல் வீட்டிலுள்ள குளிர்சாதன பெட்டி பின்புறம் தேங்கும் நீர், திறந்த நிலைக் கிணறு, தண்ணீர் தொட்டி, ஆட்டுரல் போன்றவற்றிலும் இந்த வகை கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும். தற்போது இந்தவகை கொசுக்கள் கழிவுநீரில் இனப்பெருக்கம் செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

சுகாதாரப் பணிகள்

டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க முதல்கட்டமாக கொசு உற்பத்திக்கான வாய்ப்புகளைக் குறைப்பது மற்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதாகும். மடத்துக்குளத்தையடுத்த கண்ணாடிப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது 50-க்கும் மேற்பட்டவர்கள் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்களுக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் காணப்படுகிறது. எனவே இந்த பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தீவிர பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வழங்கி வருகின்றனர்.

மேலும் மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினருடன் இணைந்து கொசு ஒழிப்பு மற்றும் சுகாதாரப்பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் பரவல் குறித்து பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த காய்ச்சல் மற்ற பகுதிகளுக்கும் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்