வேளாண் பொறியியல் துறையின் மூலம் விவசாயிகளுக்கு வாடகைக்கு விடப்படும் எந்திரங்கள்
வேளாண் பொறியியல் துறையின் மூலம் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் வாடகைக்கு விடப்படுவதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் வாடகைக்கு வழங்கப்படும் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளின் வாடகை விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வேளாண் எந்திரங்கள்
தமிழக அரசு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போதயை சூழலில் வேலையாட்கள் பற்றாக்குறையை சமாளித்து, வேளாண் பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிப்பதற்கு மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் குறைந்த வாடகையில் வேளாண் எந்திரங்கள், கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, மாவட்ட வேளாண்மை பொறியியல் துறையில் மண் தள்ளும் எந்திரங்கள், உழுவை எந்திரங்கள், சக்கர வகை மண் அள்ளும் எந்திரங்கள் அல்லது ஜே.சி.பி எந்திரங்கள் மற்றும் வாகனத்துடன் இயங்கக்கூடிய தேங்காய் பறிக்கும் எந்திரம் உள்ளிட்டவை உள்ளன. அதுமட்டுமின்றி, உழுவை எந்திரத்துடன் இணைத்து இயக்கக்கூடிய குழி தோண்டும் எந்திரம், வைக்கோல் கட்டும் கருவி, சட்டிக் கலப்பை, சுழல் கலப்பை, கொத்துக் கலப்பை, தென்னைமட்டை துகளாக்கும் கருவி, வாழை மரத்தண்டு துகளாக்கும் கருவி, நிலக்கடலை செடி பிடுங்கும் கருவி, திருப்பும் வசதி கொண்ட வார்ப்பு இறகுக் கலப்பை, விதை நடும் கருவி, சோளம் அறுவடைசெய்யும் கருவி, கரும்பு மற்றும் காய்கறி நாற்று நடும் கருவி, பல்வகை கதிரடிக்கும் எந்திரம் ஆகியவையும் உள்ளன.
வாடகை விவரம்
தமிழக அரசின் திருந்திய வாடகை விவரங்களின்படி 19.9.2022 அன்றைய நாளில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு மண் தள்ளும் எந்திரத்துக்கு ரூ.1230-ம், உழுவை எந்திரம் (அனைத்து இணைப்புக் கருவிகள் உட்பட) ரூ.500-ம், சக்கரவகை மண் அள்ளும் எந்திரம் அல்லது ஜே.சி.பி எந்திரம் ரூ.890 மற்றும் வாகனத்துடன் இயங்கக்கூடிய தேங்காய் பறிக்கும் எந்திரம் ரூ.450 என்ற குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது.
இந்த எந்திரங்களை பெற விவசாயிகள், உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, ஸ்டேட் பாங்க் காலனி வடக்கு, தூத்துக்குடி (செல்போன் எண்: 9655708447) அலுவலகத்தையும், உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, எட்டயபுரம் பிரதானசாலை, சிவவிக்னேஷ் மகால் அருகில், கோவில்பட்டி (செல்போன் எண்: 9443276371) அலுவலகத்தையும், உதவிசெயற் பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, முத்துமாலை அம்மன் கோவில் தெரு, திருச்செந்தூர் (செல்போன் எண்: 9443688032) அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம். அல்லது இ-வாடகை செயலியில் பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.