வருகிற 7, 8-ந்தேதிகளில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வங்கக்கடலில் வருகிற 7, 8-ந்தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Update: 2023-05-02 14:20 GMT

சென்னை,

தமிழகத்தில் கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து கோடை வெயில் சுட்டெரித்தது. பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானதை பார்க்க முடிந்தது. அதிலும் கரூர், ஈரோடு மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பம் பதிவானது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் வளிமண்டலத்தின் கீழடுக்கில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி தொடர்ந்து நிலவுவதாலும், காற்றில் ஈரப்பதத்தின் அளவு கூடியிருப்பதால், நிலப்பகுதிகளில் ஈரப்பதத்தின் குவிவும் அதிகரித்திருப்பதாலும் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து கொண்டு இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், வேலூர், திருப்பத்தூர் உள்பட உள்மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் கூறியிருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக நாளை மறுநாள் முதல் 6-ந்தேதி (சனிக்கிழமை) வரை தமிழ்நாட்டில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், பின்னர், 6-ந்தேதி தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி, வருகிற 7 (ஞாயிற்றுக்கிழமை), 8 (திங்கட்கிழமை)-ந் தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்