குடும்பத்தகராறில் காதல் கணவர் வெட்டிக்கொலை: மனைவி கைது

மயிலாடுதுறை அருகே குடும்பத்தகராறில் காதல் கணவரை வெட்டிக்கொலை செய்ததாக அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-31 20:49 GMT

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை அருகே உள்ள மொழையூர் மண்தாங்கி திடல் பகுதியை சேர்ந்தவர் ரம்யா (வயது 28). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். அப்போது அங்குள்ள ஒரு பேக்கரியில் பணியாற்றிய நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருேக உள்ள கூத்தங்குழியை சேர்ந்த குமார்(35) என்பவருக்கும் ரம்யாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

இதைத்தொடர்ந்து குமார் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் மயிலாடுதுறை அருகே மொழையூரில் வசித்து வந்தார். குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது.

வெட்டிக்கொலை

இதனால் கணவனை பிரிந்த ரம்யா தற்போது சொந்த ஊரில் தனது தாயார் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்தார். மேலும் அவர் மயிலாடுதுறையில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து அதில் வரும் வருமானத்தை கொண்டு குடும்பம் நடத்தி வந்தார்.

இதற்கிடையே நேற்றுமுன்தினம் இரவு குமார், ரம்யா வீட்டுக்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரம்யா வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து குமாரின் தலையில் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரம்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்